நேபாள நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வாழும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 


இந்திய - சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு கிட்டதட்ட 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட நேபாள நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இங்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9இ ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். இது ரிக்டர் அளவில் 7.9 பதிவானது. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டாலே மக்கள் பீதியடைந்து விடுவார்கள். 


இப்படியான நிலையில் நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இது பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதனால் பொருள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடி வந்தனர். இதனிடையே கடந்த 3 நாட்களாகவே நேபாளத்தில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 






கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி காலை நேரத்தில் தலைநகர் காத்மண்டுவின் மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் தாடிங்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கட்டியில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லியிலும் இலேசாக உணரப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து நேற்று 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் உலகில் அதிகளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் 11வது இடத்தில் நேபாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Disney Reliance: ரூ.83 ஆயிரம் கோடியா? - டிஸ்னியை விலைக்கு வாங்குவதில் ரிலையன்ஸ் தீவிரம் - ஸ்ட்ரீமிங்கிலும் ஆதிக்கம்