அதீத வேலைப் பளு ரோபோ எனப்படும் இயந்திரங்களைக் கூட பாதிக்குமா? ஆம் என்று தைரியமாகப் பதில் சொல்லும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Continues below advertisement

தென் கொரியாவின் குமி சிட்டி கவுன்சில் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ரோபோ, மாடிப் படிகளில் சிதறி விழுந்து இறந்துள்ளது, அதாவது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது. 

பல்வேறு பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பிரத்யேக ரோபோ

இதுகுறித்து டெய்லி மெயில் அளித்துள்ள தகவலின்படி, கலிஃபோர்னியா நகரத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Bear Robotics, இந்த ரோபோவைத் தயாரித்துள்ளது. ரோபோ வெயிட்டர்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், குமி சிட்டி கவுன்சிலுக்காகப் பல்வேறு பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பிரத்யேக ரோபோவைத் தயாரித்தது.

Continues below advertisement

ரோபோ சூப்பர்வைசர், குடிமைப் பணியாளராகப் பணியாற்றி வந்தது. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோபோ சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டது. இதுதான் முதன்முதலில் ஆஃபிசராக நியமிக்கப்பட்ட ரோபோவாகும். தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ரோபோ கடினமாக உழைத்து வந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் சுற்றிக்கொண்டே இருந்த ரோபோ

ஜூன் 26ஆம் தேதி திடீரென குமி சிட்டி கவுன்சில் கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது மாடிப் படிகளுக்கு இடையே விழுந்து சிதறிக் கிடந்தது. அதற்கு சிறிது நேரம் முன்னதாக, ஒரே இடத்தில் ரோபோ வித்தியாசமாக நீண்ட நேரம் சுற்றிக்கொண்டே இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே கீழே விழுந்த ரோபோ, தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ரோபோவின் கீழே விழுந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து குமி சிட்டி கவுன்சில் விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் இதே ரோபோவைப் பழுது பார்த்து, மீண்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் முடிவு செய்துள்ளது.

இணைய உலகில் பல்வேறு கேள்விகள்

ஓய்வில்லாமல் உழைத்த ரோபோ கீழே விழுந்து, தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்ட சம்பவம், இணைய உலகில் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு வகையான கமெண்ட்டுகளை ஏற்படுத்தி உள்ளது. ரோபோ தற்கொலை செய்துகொண்டதாகப் பலர் நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.