பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பிரிட்டன் பொதுத் தேர்தல்:
பிரிட்டனில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தலில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, தற்போதைய பிரதமருமான ரிசிக் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதுவரை வெளியான முடிவுகளின் தரவுகளின்படி, கியர் ஸ்டாமரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், இது கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மோசமான தோல்வியாகும் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் குறித்து சுனக் தெரிவிக்கையில், என்னை மன்னித்து விடுங்கள், தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றுள்ள ஸ்டாமர் தெரிவித்துள்ளதாவது, இன்றிலிருந்தே மாற்றத்திற்கு தயாராகுங்கள் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
பிரதமர் மோடி, கியர் ஸ்டாமருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கியர் ஸ்டாமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் கூட்டாண்மையை வலுப்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ரிசி சுனக்கிற்கு தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாட்டின் போற்றத்தக்க தலைமைத்துவவாதியாக இருந்த ரிசி சுனக்கிற்கு நன்றி, உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்த, உங்களின் தீவிர பங்களிப்புக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.