கொரோனா தொற்று


கொரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் அந்தந்த நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை கண்டது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்தந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக, பிரட்டனில் கொரோனா தொற்றால் 2.20 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பிரிட்டன் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்றும் ஒரு காரணமாகும். 


கொரோனா காலத்தில் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வந்தார். அப்போது,  போரிஸ் ஜான்சன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனாவை மிக மோசமாக கையாண்டதாக கூறப்பட்டதே அவர் பதவி விலக காரணமாக இருந்தது.  போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தார். போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றத்தில் இருந்து பல்வேறு சலசலப்புகள் நீடித்து வருகின்றன. 


சிக்கிய டைரி


இந்நிலையில், தற்போது பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனாவை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2026ஆம் ஆண்டு வரை விசாரணை நடத்தும் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையில், கொரோனா உச்சத்தின்போது, பிரிட்டன் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த பேட்ரிக் வாலன்ஸின் டைரி ஒன்று விசாரணை குழுவிடம் கிடைத்தது. அந்த டைரியில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 25ல் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோர் கொரோனா தொற்று குறித்து ஆலோசித்தாக பேட்ரிக் வாலன்ஸ் டைரியில் குறிப்பிட்டுள்ளார். 


அந்த ஆலோசனை கூட்டத்தில், "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம். மக்கள் இறந்தால் இறக்கட்டும். அரசு அதை அனுமதிக்க வேண்டும்" என்று ரிஷி சுனக் பேசியதாக அந்த டைரியில் இருந்துள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ், "மக்கள் இறக்கட்டும் பரவாயில்லை என்று ரிஷி சுனக் நினைக்கிறார். இது தலைமை பண்பு இல்லாதது போல் உணர்கிறேன்" என தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.  ரிஷி சுனக் பேசியதாக கூறப்படும் இந்த தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 


ரிஷி சுனக் தரப்பு சொல்வது என்ன?


இந்த விவகாரம் குறித்து ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரங்களை வழங்குகள். இதுகுறித்து தனித்தனியாக பதிலளிக்க முடியாது. இதற்கு பதிலாக, சரியான ஆதாரங்களை வழங்கினால், ரிஷி சுனக் பதிலளிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே, ரிஷி சுனக் தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.