Israel War: இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார்.


போரால் நிலைகுலைந்த காசா


இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாலஸ்தீன பகுதியான காசா நிலைகுலைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் போரை உடனடியாக தள்ளி வைக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நவம்பர் 16ஆம் தேதியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஐந்து நாள்களுக்கு போரை நிறுத்தி வைக்கும் வகையில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, அமெரிக்க ஆகியவைக்கிடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. 


போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டுமானால் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் நிபந்தனை விதித்தாக தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முற்றிலுமாக மறுத்திருந்தார். 


கையெழுத்தாகும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்


இந்த நிலையில், இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெலிகிராமில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து கத்தார் பிரதமர் நேற்று முன்தினம் கூறுகையில், "தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிறிய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன" என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் நெருங்கி வருவதாக நம்புகிறேன்" என்றார்.


ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 50 முதல் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில், ஐந்து நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 300 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.


இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். சர்வதேச போர் விதிகளை மீறி மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.