பிரதமர் மோடி குறித்த சர்ச்சை ஆவணப்படம் பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியை புறந்தள்ளிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மோடிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக். அண்மையில் பிபிசி செய்தி நிறுவனம் பிரதமர் மோடி பற்றி 2 பகுதிகள் கொண்ட ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2002ல் குஜராத் கலவரத்தின் போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. இந்த ஆவணப்படம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பிரிட்டன் வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலரும் இந்த ஆவணப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிட்டனின் குடிமகன் லார்டு ராமி ரங்கர், இந்த ஆவணப்படம் மூலம் பிபிசி, இந்திய மக்கள் 130 கோடி பேரின் உணர்வுகளை பெருமளவில் காயப்படுத்திவிட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆவணப்படம் சில தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிபிசி ஆவணப்படம் பற்றி வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசுகையில், இது நிச்சயமாக அவதூறு பிரச்சாரம் என்றே நாங்கள் பார்க்கிறோம். இதை அவர்கள் விலகி நின்று நடுநிலையாக அணுகாமல் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவில் ஒளிபரப்பாகவில்லை என்பதால் இது குறித்து நாங்கள் மேலும் பேச விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவெளி எம்பி இம்ரான் ஹுசைன் இந்த ஆவணப்படம் பற்றி விவாதத்தை எழுப்பினார். அப்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நின்றார். ”இந்தியப் பிரதமர் பற்றிய அந்த பண்புரு வர்ணனையை தான் ஏற்கவில்லை. பிரிட்டன் அரசின் நிலைப்பாடு இதில் மிகவும் தெளிவானது. இந்த அரசு ஒருபோதும் பிறர் துன்புறுத்தப்படுவதை சகித்துக் கொள்ளாது. இந்தியப் பிரதமர் விமர்சிக்கப்பட்ட விதத்தை நான் முற்றிலுமாக புறந்தள்ளுகிறேன்” என்றார்.
யார் இந்த ரிஷி சுனக்:
ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை பெற்ற ரிஷி, கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்னர், பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, கொரோனா பொருளாதார மீட்பு திட்டத்தை அறிவித்து வெகுவான பாராட்டை பெற்றார்.
பிரிட்டன் அரசியல்வாதிகளிலேயே பணக்காரர்களில் ஒருவராக உள்ள ரிஷி, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009ஆம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
கடந்த 1980ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி, சவுத்தாம்ப்டனில் குடியேறிய இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ரிஷி சுனக். அவரது பெற்றோர் யஷ்வீர் மற்றும் உஷா, இருவரும் மருந்தாளுநர்கள் ஆவர். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.
சுனக்கின் தந்தைவழி தாத்தா பாட்டி இப்போது பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்திலிருந்து வந்தவர்கள். இருப்பினும், 1930 களில் நடந்த மதக் கலவரம் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சுனக் தனது பள்ளிப் படிப்பை வின்செஸ்டர் கல்லூரியில் முடித்தார். இங்கு படித்த ஆறு பேர் நிதியமைச்சர்களாகி உள்ளனர். கோடை விடுமுறையில் சவுத்தாம்ப்டனில் உள்ள இந்திய உணவகத்தில் பணியாளராகவும் ரிஷி பணியாற்றினார். பின்னர், அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றார்.
2001 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கைலக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கோல்ட்மேன் சாச்ஸின் ஆய்வாளராக ஆனார். 2004 வரை முதலீட்டு வங்கி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர், அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். அங்குதான், அவர் தனது மனைவி அக்சதா மூர்த்தியை சந்தித்தார்.
முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் இருந்து 2015 இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மற்றும் 2019 இல் மீண்டும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
பின்னர், அவர் தெரசா மே அரசாங்கத்தில் இணை அமைச்சரானார். 2019 இல், பிரிதமர் போரிஸ் ஜான்சனால் நிதியமைச்சகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2020 இல், நிதித்துறை அமைச்சரானார். கடந்த ஜூலை 2022 இல் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ரிஷி ராஜினாமா செய்தார். இது போரிஸ் ஜான்சன் பதவி விலக காரணமாக அமைந்தது.