அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லாண்ட் நகர சபை உறுப்பினராக  30 வயதான இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ஜனனி ராமச்சந்திரன் பதவியேற்றுக் கொண்டார். அந்த வகையில் அந்த பொறுப்பை வகிக்கும் மிக இளைய மற்றும் முதல் பால் இருமைக்குள் வராத இந்திய வம்சாவளிப் பெண் ஜனனி ஆவார். ஜனவரி 10 அன்று நடந்த பதவியேற்பு விழாவில், ராமச்சந்திரன் 4 மாவட்டத்துக்கான ஓக்லாண்ட் நகர சபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.அப்போது அவர் பாரம்பரிய இந்திய உடையான புடவையை உடுத்தி இருந்தார். 


"நாம் வெற்றி பெற்றுள்ளோம்! ஓக்லாண்ட் மாவட்டம் 4க்கு அடுத்த நகர கவுன்சில் உறுப்பினராக பொறுப்பேற்று இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்!! ஓக்லாந்தின் வரலாற்றில் நான் அதிகாரப்பூர்வமாக இளைய கவுன்சில் உறுப்பினராக இருப்பேன். ஓக்லாண்ட் நகர சபையில் பணியாற்றும் முதலாவது #LGBTQ  மற்றும் முதலாவது தெற்காசிய பெண் நான் என்பதில் பெருமைகொள்கிறேன்", என்று அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.






"என்னை நம்பி இதைக் கட்டியெழுப்ப உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நான் சம்பிரதாயமாக பதவிப் பிரமாணம் எடுத்தபோது என் அன்புக்குரியவர்கள் என் பக்கத்தில் இருந்தது எனக்குப் பெருமை!" என்று அவர் ட்விட்டரில் தனது நன்றியைத் பகிர்ந்துகொண்டார். ஜனனி ராமச்சந்திரன் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து குடியேறியவர்களின் மகள் ஆவார்..


அவரது வலைத்தளத்தில் கிடைத்துள்ள தகவலின்படி ராமச்சந்திரன் முன்பு ஓக்லாண்ட் நகர பொது நெறிமுறை ஆணையத்தில் கமிஷனர் பதவியை வகித்துள்ளார், மேலும் ஆசிய மற்றும் பசிபிக் தீவு அமெரிக்க பிரிவுக்கான கலிபோர்னியா கமிஷனில் அவர் கூடுதல் பதவியை வகித்து வருகிறார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டத் தொண்டு பிரிவுகளில் பல பதவிகளை வகித்துள்ளார். அவரது வலைத்தளத்தின்படி, அவர் 2021 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்திற்காகப் போட்டியிடும் தனது முயற்சியில் சிறப்புத் தேர்தல் வாக்குப்பதிவில் வெற்றிபெற்றதன் மூலம் பல அரசியல் நிபுணர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் எனக் கூறப்படுகிறது.