பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரிஷி சுனக் திருநர்களுக்கு எதிரானவர் என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக், நாடு பொருளாதார கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளதால், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். இதற்கிடையே, ​​திருநங்கைகள் குறித்த சுனக்கின் நிலைப்பாட்டின் பழைய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. டாக் டிவி நிகழ்ச்சி ஒன்றில், ​​சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரிடமும் ’டிரான்ஸ்’ பெண்கள் குறித்து அவர்கள் பெண்கள்தான் எனக் கருதுகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.


அவர்கள் இருவருமே "இல்லை" என்று வெறுமனே பதிலளித்தனர். அவரது இந்த நிலைப்பாடு திருநர்கள் உயிரியல் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்கிற கருத்தாக்கத்தில் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது ‘திருநங்கைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் உயிரியல் அடிப்படையில் அவர்களுக்கு கழிவறைகள் மற்றும் விளையாட்டு போன்ற விவகாரங்களில் தனிப்பட்ட உரிமை அளிக்கப்பட வேண்டும்’ என முன்பு அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.






மற்றொருபக்கம் இதற்கு எதிர்மறையான செய்தியில், "பால்புதுமையினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள், ஹெச்ஐவி பரவுதல் போன்றவை கட்டுக்குள் கொண்டுவரப்படும். 2030ம் ஆண்டுக்குள் ஹெச் ஐ வி பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்படும். பிரிட்டனில் உள்ள எவரும் தாங்கள் யாரென்பதையோ அல்லது யாரை விரும்புகிறோம் என்பதையோ பயந்து மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் மேலும் LGBT+ க்கு பிரிட்டன் பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்சம் தவறானது என்றும் அவர் ஒரு பேட்டியில் வலியுறுத்தி இருந்தார். 


கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என அக்டோபர் 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்த நிலையில் ஆதரவு கிடைக்கவில்லை. 


பிரதமராக பதவியேற்பு:


இதையடுத்து , ரிஷி சுனக் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு 100-க்கு மேற்பட்டோரின் ஆதரவு, அதாவது பெரும்பான்மைக்கு அதிகமாக ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ரிஷியை ஆட்சி அமைக்க, மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மன்னர் சார்லஸை- 3ஐ சந்தித்தபின், பிரதமராக பதவியேற்றார்.  


இந்நிலையில் பதவியேற்றவுடன் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இருந்த பலரையும் ராஜினாமா செய்யுமாறு, ரிஷி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


பதவியேற்றதும் அதிரடி


இதுவரை மூன்று அமைச்சர்கள் பதவி விலக கேட்டு கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் விக்கி ஃபோர்ட் ஆகியோரும் அடங்குவர் என கூறப்படுகிறது. ஆனால் நிதி துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தொடர்ந்து பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.