உங்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார் என்று ஜெய்சங்கருக்கு சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார் ஐக்கிய அமீரக எமிரேட் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் சுல்தான் அல் ஒலாமா.
ஐக்கிய அமீரக எமிரேட் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் ஒமர் சுல்தான் அல் ஒலாமா டெல்லியில் நடந்த  கருத்தரங்கில் இணையவழியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் மட்டுமல்ல இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 


அதில் பேசிய அல் ஒலாமா, வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு பக்கத்தை உலக நாடுகள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சரை நான் மிகவும் ரசிக்கிறேன். அவருடைய சில பேச்சுக்களை கேட்டு வியந்துள்ளேன். இந்தியாவும் யுஏஇயும் ஒருவகையில் ஒரே மாதிரியான கொள்கை கொண்டிருக்கிறது. நாங்கள் இருவருமே எந்தப் பக்கமும் சார்பு கொள்ளத் தேவையில்லாமல் இருக்கிறோம். ஐக்கிய அரபு எமீரகம் இந்தியாவுடன் சில விஷயங்களில் ஒத்துழைத்து நட்பு பாராட்டினால் அதனால் வேறு நாடுகளுடன் பணிபுரிய முடியாதென்றில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் நாங்கள் இந்தியாவுடனும் ஒத்துழைப்போம் அமெரிக்காவுடனும் சேர்ந்து இயங்குவோம் என்றார். உலகை வெல்ல வேண்டுமானால் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும். இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து நடவடிக்கைகள் எடுத்தால் உலகில் நாம் தடம் பதிக்கலாம் என்றார்.


கவனம் ஈர்த்த ஜெய்சங்கரின் பேச்சு:


அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் வெளியுறவு அமைச்சர் ஆற்றிய உரை கவனம் பெற்றது. அப்போது அவர், "வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளார், ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்றெல்லாம் அவ்வப்போது நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். அந்தப் பயணங்களில் ஒரு வெளியுறவு அமைச்சர் என்ன செய்கிறார் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நானே அதனை உங்களுக்கு விளக்குகிறேன். எனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு இரண்டு இலக்குகள் உண்டு. ஒன்று உலக நாடுகளுக்கு இந்தியாவின் சாதனைகளை, பெருமைகளை, திறமைகளை எடுத்துரைப்பது. இன்னொன்று உலகத்தை இந்தியா நோக்கி ஈர்த்துக் கொண்டு வருவது. ஆம், இந்த உலகம் இந்தியாவிற்காக தயாராகிவிட்டது. அதற்குக் காரணம் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகள். அதையே நான் கொண்டு சேர்க்கிறேன். மத்திய அரசு 10 நாட்களுக்கான குறுகிய கால திட்டம் முதல் 10 ஆண்டுகளுக்கான நீண்ட கால தொலைநோக்குப் பார்வை என பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது. மோடியின் வெளியுறவுக் கொள்கையில் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்கள் நலன் உள்ளன. அதனாலேயே உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வரத் தயாராக இருக்கின்றன.


இந்த உலகம் எப்போதும் மாற்றங்களை விரும்பும் அமெரிக்காவையும் ஏற்றம் காணும் சீனாவையும் கவனிக்க வேண்டும். சீனா அரசியல், ராணுவம், பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே நாம் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ஊடகங்களில் கவனம் பெற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டிப் புகழ்ந்துள்ளார்.