பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாததற்கு ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என கனடாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் இதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, பிரிட்டன் கொலம்பியா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரோஸ் மெக்கென்சி கிர்க்பாட்ரிக் என்பவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கிர்க்பாட்ரிகிடம் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. பாதுகாப்பான முறையில் பாலியல் உறவு வைத்து கொள்ள சம்மதித்த பெண்ணுடனான உறவின்போது ஆணுறை அணியவில்லை என கிர்க்பாட்ரிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கவில்லை.
உடலுறவின் போது ஆணுறையை ரகசியமாக அகற்றும் செயல், சில சமயங்களில் "stealthing" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாதவர்களை குற்றவாளி என இந்த இரண்டு நாடுகளிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளது.
"ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. இல்லை, ஆணுறை இல்லாமல் பாலியல் உறவு வேண்டாம் என்றால் ஆம் என்று எடுத்து கொள்ள முடியாது" என்று நீதிபதி ஷீலா மார்ட்டின் பெரும்பான்மை தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
கனட சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியான தாக்குதல் நடந்தது என்பதை நிரூபணம் செய்ய குறிப்பிட்ட பாலியல் செயல் ஒப்புதல் இன்றி நடைபெற்றதற்கான ஆதாரம் தேவை. ஆணுறை பயன்பாடு என்பது பாலியல் உறவின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஏனெனில், ஆணுறை இல்லாமல் பாலியல் உறவு மேற்கொள்வது என்பது ஆணுறையுடன் பாலியல் உறவு மேற்கொள்வதிலிருந்து வேறுபட்ட ஒன்று என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கிர்க்பாட்ரிக் ஒரு பெண்ணை ஆன்லைனிலும் பின்னர் நேரிலும் சந்தித்தார். அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் உறவு கொண்டனர். பெண்ணுக்கு தெரியாமல் ஒரு முறை ஆணுறையுடனும் பின்னர் மீண்டும் ஒரு முறை ஆணுறை இல்லாமலும் பாலியல் உறவு வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
அவர் இரண்டாவது முறையாக ஆணுறை பயன்படுத்தவில்லை என்பது தனக்குத் தெரியாது என்றும், அவ்வாறு செய்திருந்தால், அதற்கு அவர் சம்மதித்திருக்க மாட்டார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்