இலங்கையில் மக்கள் அமைதிகாக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்ஷே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால் அந்நாட்டு பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் சீரழிவுக்கு ராஜபக்ஷே குடும்பத்தினர் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள் அரசுப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அதோடு, பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் அவைகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
இலங்கையில் இதுநாள் வரை நடைபெற்றுவந்த அமைதிப் போராட்டம், வன்முறையாக மாறியுள்ளது. இந்த நிலையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்ஷே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், ஒருமித்த கருத்துகள் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் வேண்டுகோளை ஏற்க தயாரில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில். ராஜபக்ஷே குடுமபத்தினர் அனைவரும் அரசுப் பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அதிபராகத் தொடரும் கோத்தபய ராஜபக்ஷேவும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜபக்ஷே குடும்பத்தினர் எங்கும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, இலங்கை கடற்படை, ராணுவ முகாம்கள், விமான நிலையங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.