2024ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 91 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று புதிய சாதனை படைத்துள்ளன.


உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியல்:


டைம்ஸ் நிறுவனத்தின் 2024ம் ஆண்டின் உலக பல்கலைக்கழங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஆய்வில் 1,799 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. நடப்பாண்டு அதாவது 20வது ஆண்டு வெளியான இந்த தவரிசைப்பட்டியலில் 108 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த, 1,904 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுளன. அவை,  கற்பித்தல், ஆராய்ச்சி தரம், ஆராய்ச்சி சூழல், சர்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில் ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, இந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 5 அம்சங்களில் 4 புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. அதில் 3 ஆய்வுகளின் தரம் தொடர்பானதாகவும், தொழில்துறையில் பெற்றுள்ள காப்புரிமைகள் தொடர்பாகவும் அலசுகிறது.


91 இந்திய பல்கலைக் கழகங்கள்:


அதில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன. அதனபடி, மொத்தமாக இந்தியாவை சேர்ந்த 91 பல்கலைக்கழகங்கள், உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 75 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தது. 2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 19 மட்டுமே ஆகும்.  இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, இந்த தரவரிசை தொடர்பான ஆய்வை இந்தியாவின் ஐஐடி நிறுவனம் புறக்கணித்துள்ளது.


முதலிடம் யாருக்கு? 


உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அளவில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 2017ம் ஆண்டிற்குப் பிறகு 201 முதல் 250வது இடத்திற்குள் அந்த பல்கலைக்கழகம் வருவது இதுவே முதல்முறயாகும். அதனை தொடர்ந்து, கவுகாத்தி ஐஐடி மற்றும் தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும்,  உலகின் சிறந்த 800 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இணைந்துள்ளன. கடந்த ஆண்டு 1001-1200 வரையிலான பிரிவில் இருந்த அவை தற்போது 601-800 வரையிலான பிரிவிற்கு முன்னேறியுள்ளன. இவை தவிர அண்ணா பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (501 600), ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் (501–600) உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழகங்கள் முதல் 600 இடங்களில் உள்ளன.


அண்ணா பல்கலைக்கழகம்:


சென்னையை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்த நிலையில் தற்போது அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அதேபோல் கடந்த ஆண்டு 800-1000 இடத்துக்குள் இருந்த கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது 600-800 இடங்களுக்கான பிரிவிற்கு முன்னேறியுள்ளது. 


உலக அளவில் முதலிடம் யாருக்கு?


இந்த தரவரிசைப் பட்டியலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்துள்ளன. தொடர்ந்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, இம்பீரியல் காலேஜ் லண்டன், கலிபோர்னியா பல்கலைக்கழகம், யாலே ஆகிய பல்கலைக்கழகங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.