கடந்த ஜூன் மாதம், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய - கனட நாடுகளுக்கிடையே பதற்றம்:
கனட பிரதமரின் குற்றச்சாட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம், இந்திய, கனட நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் பரிமாறி கொண்ட தகவல்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கிடைத்த உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்தியா மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு சுமத்தியதாக அமெரிக்காவின் மூத்த தூதர் டேவிட் கோஹன் தெரிவித்திருந்தார். எனவே, கனடாவின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அமெரிக்க இருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில், இந்திய - கனட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான கனட தூதர் பாப் ரே, தங்களது நாட்டில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இந்தியாவை சீண்டுகிறாரா கனட தூதர்?
விரிவாக பேசிய அவர், "அந்நிய தலையீடு காரணமாக ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் தேவைக்காக நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கு அரசின் விதிகளை வளைக்க முடியாது. அதே நேரத்தில், சமத்துவத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகங்களின் விழுமியங்களையும் நாம் நிலைநாட்ட வேண்டும். அரசியல் தேவைக்காக நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கு அரசின் விதிகளை வளைக்க முடியாது. ஏனென்றால், அந்நிய தலையீடுகளின் மூலம் ஜனநாயகம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ஆனால், உண்மை என்னவென்றால், நாம் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் கடைப்பிடிக்காவிட்டால், நமது திறந்த, சுதந்திரமான சமூகங்களின் கட்டமைப்பு உடைய தொடங்கும்" என்றார்.
கனட தூதருக்கு முன்பு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கனடாவை மறைமுகமாக விமர்சித்தார். "பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கான எதிர்வினைகளை அரசியல் வசதிகள் தீர்மானிக்கின்றன என்பதாக நாம் எண்ணிவிடக்கூடாது. அதேபோல், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளிப்பது, உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தேவைக்கு ஏற்ப செய்யக்கூடாது" என்றார்.