மனிதர்கள் உடல் ஒட்டிப் பிறப்பதை சியாமிஸ் இரட்டையர்கள் என்பார்கள். சியாமிஸ் இரட்டையர்களை மையமாக வைத்து தமிழில் ‘மாற்றான்’ என்கிற ஒரு திரைப்படத்தையே இயக்கினார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
பிறக்கும் குழந்தைகள் உடலின் ஏதோ ஒரு பகுதியோ அல்லது ஒன்றுக்கும் மேலான பகுதியோ ஒட்டிப் பிறந்திருக்கும்.
இதற்கு சில சமயங்களில் விலங்குகளும் விதிவிலக்கல்ல. அண்மையில் அமெரிக்காவின் மாசெச்சூட்ஸில் இரண்டு ஆமைகள் உடல் ஒட்டியும் ஆறு கால்களுடனும் பிறந்துள்ளது. உடல் ஒட்டியிருந்தாலும் இரண்டு தலையுடன் இந்த ஆமைகள் இரண்டும் பிறந்துள்ளன. இந்த விநோத ஆமைகள் அங்கே பார்வையாளர் வரவை அதிகரித்திருக்கின்றன. இரண்டு ஆமைகளின் முதுகெலும்பும் தனித்தனியாக இருந்தாலும் உடலின் ஒரு இடத்தில் மட்டும் பின்னிப்பிணைந்துள்ளன. இந்த டைமண்ட் பேக் ரக கடல் ஆமை மாஸெச்சூட்ஸின் வனவிலங்குப் பூங்காவில் பிறந்துள்ளன.
ஆமைகள் இப்படி ஒட்டிப்பிறப்பதற்கு பைசெப்ஃபலி என்று பெயர். மரபணு ரீதியான மாற்றம் அல்லது சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்களாலும் இப்படி ஆமைகள் ஒட்டிப்பிறக்கலாம் என அந்த பூங்கா நிர்வாகத்தினர் இது குறித்து பதில் அளித்துள்ளனர்.
ஆனால் வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஊடகத்துக்கு பூங்கா நிர்வாகத்தினர் அளித்த பதிலில், ஆமை பிறந்தபோது ஆரோக்கியமாக இருந்தாலும் அவை நீண்ட காலம் உயிர்வாழக்கூடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.