இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அந்த நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.


அவர் பேசியதாவது,  “அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும். இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.  எரிவாயு கப்பலுக்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டாலர்களைக் கூட நிதியமைச்சகத்தினால் திரட்டிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இலங்கையில் மின்தட்டுப்பாடு நாளொன்றுக்கு 15 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 1-ந் தேதியில் இரண்டு டீசல் கப்பல்களும், அத்துடன் மே 18 மற்றும் மே 29ம் தேதிகளில் இரண்டு பெட்ரோல் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளன. நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு தேவையான நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எரிவாயு பற்றாக்குறைக்கு நாளை முதல் ஒப்பீட்டளவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைக்குரியது.


வாழ் நாளில் விமானத்தில் பயணம் செய்யாத சாதாரண மக்கள் கூட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் நட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் ஓரிரு மாதங்கள் மிகவும் கடினமானது. மக்களுக்கு பொய்யுரைக்க விரும்பவில்லை. அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டு அபிவிருத்தி வரவு - செலவு திட்டத்திற்கு பதிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளேன். பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த யோசனை முன்வைத்துள்ளேன்."


இவ்வாறு அவர் கூறினார்.