சிங்கப்பூர், ஜப்பான் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 


அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 


நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல்.


தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர். இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் - ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன்.  இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரி போல இதனை எழுதுகிறேன்.


மே 23-செவ்வாய்


சென்னையில் இருந்து சிங்கபூருக்கு புறப்பட்டேன். சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு - வணிகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் உடனிருந்தனர். 


மே 24-புதன்


தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான  தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான கிம்யின் வாங், கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.


சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். கருத்தரங்கில், தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன். சிங்கபூரில் அமைச்சர் சண்முகம் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்தார். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், காலைச் சிற்றுண்டித் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் பாராட்டினார்


சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றியதுடன், சிங்கப்பூரின் அரசு நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளரான லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும், மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவரது சிலை நிறுவப்படும் என்றும், பண்பாட்டு விழாவில் அறிவித்த போது, வரவேற்பும் ஆரவாரமும் நெடுநேரம் நீடித்தன. 


மே 25-வியாழன்


தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன்.


மே 26 -வெள்ளி


ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல ஃபின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.


ஒசாகாவில் உள்ள கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.


மே 27- சனிக்கிழமை


ஒசாகாவில் உள்ள ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குப் புறப்பட்டோம். ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த வரவேற்பு மகிழ்வைத் தந்தது. 


மே 28-ஞாயிறு


புல்லட் ரயில் பயணத்தில் இரண்டரை மணிநேரத்தில் 500 கிலோமீட்டரை கடந்து டோக்கியோ வந்தடைந்தோம். நம் நாட்டில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதையும் மத்திய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நத்தை வேகத்திலான ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று, இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.


 ஜப்பான் நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி, டோக்கியோவில் வாழும் தமிழர்கள் கீழடி அருங்காட்சியகத்தையும், விரைவில் அமையவிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தையும் காண்பதற்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். 


மே-29 திங்கள்


ஜப்பான் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் ஜெட்ரோ நிறுவனத்தை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.


தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். அவர் டோக்கியோவில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக சிங்கப்பூர், ஒசாகா ஆகிய இடங்களில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்புகள், கருத்தரங்குகளில் பேசியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா இடங்களிலும் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வாருங்கள். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலம், தமிழ்நாடு என்று வலியுறுத்தினார். திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


மே 30- செவ்வாய்


காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர்.இந்தியாவில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகத்துடன் இதுகுறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி. நிறுவனத்தினர் கூறினர்.


தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் - தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு “வருக வருக” என அனைவரையும் அழைத்து, "கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது" என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.


 கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.


இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.