பிரிட்டனில் மிக நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வந்த இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகளாக மகாராணியாக இருந்ததையடுத்து ஒரு வாரத்திற்கு முன்புதான் 96ஆவது வயதில் காலமானார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திங்கள்கிழமை அரசின் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னதாக தலைநகரின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இறுதிச் சடங்கானது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று கடைசி முறையாக பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு அவரது உடல் வெளியே எடுத்து செல்லப்பட்டது. குதிரைபடை வீரர்கள் புடை சூழ, அவரது சவப்பெட்டி துப்பாக்கி பொருந்திய வண்டியில் நாடாளுமன்ற மாளிகைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள், சவப் பெட்டி அருகே நடந்து சென்றனர்.
மகாராணி எலிசபெத் அவரது கணவர் இளவரசர் பிலிப்புடன் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில், அரசின் இறுதிச் சடங்குக்குப் பிறகு அடக்கம் செய்யப்படுவார். ஞாயிற்றுக்கிழமை அன்று, மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருந்த உலகத் தலைவர்களை மன்னர் முன்றாம் சார்லஸ் வரவேற்றார்.
நேற்று அதிகாலை வரை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 11 நாள்களாக பிரிட்டன் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதி சடங்கின் மூலம் அது இன்றோடு நிறைவுபெறுகிறது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள், லண்டனில் உள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற உள்ள தனி நிகழ்ச்சி ஒன்றில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் 12 காமன்வெல்த் நாடுகள் தற்போதைய மன்னர் சார்லஸை தங்களது அரச தலைவராக ஏற்க உள்ளனர்.
எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பூங்காக்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறுதி சடங்கினை பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.