இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்கான செலவு விவரங்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இறுதி ஊர்வலம்:


இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம்  தேதி காலமானார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு,  அவரது இறுதி ஊர்வலம் லண்டனில் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் உலகத்தலைவர்கள் பலரும் பகிர்ந்து கொண்டு இறுதி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து, லண்டன் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதோடு உலகத் தலைவர்கள் தங்குவதற்கான பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.


ரூ.1,663 கோடி செலவு:


இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு மற்றும் அவரை புதைப்பதற்காக இங்கிலாந்து அரசு 161.74 மில்லியன் யூரோக்களை செலவு செய்துள்ளது. அதாவது ராணியின் இறுதிச்சடங்கிற்காக இந்திய மதிப்பில் ஆயிரத்து 447 கோடியே 65 லட்சம்  வரையில் செலவு செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு கருவூலம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச்சடங்குகள் சுமூகமாகவும், உரிய கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முன்னுரிமைகளாகும். இதற்காகவே இவ்வளவு செலவுகள் ஆனதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தேச செலவு விவரங்கள்:



  • கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை - 57.42 மில்லியன் யூரோக்கள்

  • போக்குவரத்து துறை - 2.565 மில்லியன் யூரோக்கள்

  • வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் - 2.096 மில்லியன் யூரோக்கள்

  • உள்துறை அலுவலகம் - 73.68 மில்லியன் யூரோக்கள்

  • பாதுகாப்பு அமைச்சகம் - 2.890 மில்லியன் யூரோக்கள்

  • வடக்கு அயர்லாந்து அலுவலகம் - 2.134 மில்லியன் யூரோக்கள்

  • ஸ்காட்டிஷ் அரசு - 18.756 மில்லியன் யூரோக்கள்

  • வெல்ஷ் அரசாங்கம் - 2.202 மில்லியன் யூரோக்கள்

  • மொத்தம் - 161.743 மில்லியன் யூரோக்கள்


தொடரும் சர்ச்சை:


நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையங்கள் போன்ற பொது அமைப்புகளில்,  புதிய மன்னரின் உருவப்படத்தை  நிறுவ 8 மில்லியன் யூரோக்கள் செலவிடப்படும் என அரச குடும்பம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.  இது கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், தற்போது ராணியின் இறுதிச்சடங்கிற்கு ஆன செலவு விவரங்கள் வெளியாகியுள்ளது.


இறுதிச்சடங்கு:


பிரிட்டனில் மிக நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வந்த இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகளாக மகாராணியாக இருந்ததையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி அன்று 96வது வயதில் காலமானார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னதாக தலைநகரின் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்தி, தங்களது ராணியை வழியனுப்பி வைத்தனர்.