1947 இல் தனது 21ஆவது பிறந்தநாளில், இளவரசி எலிசபெத் வானொலியில், பிரிட்டனுக்கும் அதன் காமன்வெல்த் நாடுகளுக்கும் ஆற்றிய உரையில், "எனது முழு வாழ்க்கையும், அது குறுகியதாக இருந்தாலும் அல்லது நீண்டதாக இருந்தாலும் சரி, உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் முதல் லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை பதவியில் நியமித்திருக்கிறார் இரண்டாம் எலிசபெத். உலக போருக்குப் பிந்தைய இழப்பு, தொழிலாளர்கள் பிரச்னை, பிரெக்ஸிட் போன்ற விவகாரங்களை எதிர்கொண்டு, குழப்பமான விவாகரத்து, சங்கடங்கள் மற்றும் அவதூறுகளை தாண்டி உலக புகழ்பெற்றவர் இரண்டாம் எலிசபெத் ஆவார்.
இம்மாதிரியான அனைத்தையும் தாங்கி கொண்டு மாறி வரும் உலகச் சூழலில் நங்கூரமாக திகழ்ந்தவர் மகாராணி எலிசபெத். 70 ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி புரிந்த இவர், பிரிட்டன் வரலாற்றில் மற்ற அனைத்து மன்னரையும் விட நீண்ட காலம் ஆட்சி செய்தவர் ஆவார். முந்தைய சாதனையை அவரது கொள்ளுப் பாட்டி ராணி விக்டோரியா வைத்திருந்தார். அவர் 1901 வரை 63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் மற்றும் இரண்டு நாட்கள் ஆட்சி புரிந்திருந்தார்.
வியாழன் அன்று 96 ஆவது வயதில் இறக்கும் வரை, எலிசபெத், உலகின் மிக வயதான ராணியாகவும் அரச தலைவராக இருந்தார். ஒரே ஒரு மன்னர் மட்டுமே அவரை விட நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளார். அவர்தான் பிரான்சின் லூயிஸ் XIV. 1643 மற்றும் 1715 க்கு இடையில் 72 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆளுகை செய்தார்.
அக்டோபர் 2016 இல் இறக்கும் வரை, 70 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் ஆட்சி செய்த தாய்லாந்தின் பூமிபோல் அதுல்யதேஜின் நவீன கால சாதனையை பிரிட்டன் ராணி முறியடித்துள்ளார்.
நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களை கீழே காண்போம்:
பிரான்சின் லூயிஸ் XIV:
"சன் கிங்" லூயிஸ் XIV, 1643 மற்றும் 1715 க்கு இடையில் 72 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவரே, அதிக காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார். 1638 இல் பிறந்த லூயிஸ் நான்கு வயதில் அரியணை ஏறினார். மூன்று பெரிய போர்களுக்குப் பிறகு, பிரான்ஸை ஐரோப்பாவின் முதன்மையான நாடாக மாற்றினார். திறமையான பாலே நடனக் கலைஞரான பிரான்சின் லூயிஸ் XIV, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். பாரிஸ் அருகே வெர்சாய்ஸ் அரண்மனையை கட்டினார்.
பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத்:
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் VI இன் மரணத்திற்குப் பிறகு பிப்ரவரி 8, 1952 அன்று தனது 25 வயதில் அரியணையைப் பெற்றார். காமன்வெல்த்தில் மேலும் 14 நாடுகளை ஆட்சி செய்தார். மனிதகுல வரலாற்றில் மூன்றில் ஒரு பகுதி பகுதிகள் அவரின் ஆளுகை கீழ் இருந்தது. எலிசபெத் II ஜூன் 12, 2022 அன்று தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜை முந்தி, மிக நீண்ட காலம் ஆட்சி செய்த நவீன மன்னராக உருவெடுத்தார்.
தாய்லாந்தின் மன்னர் பூமிபோல்:
இரண்டாம் எலிசபெத்துக்கு முன்பு, நவீன காலத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த சாதனையை தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் வைத்திருந்தார். ஜூன் 1946 இல் ராமா IX என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார். பரவலாக மதிக்கப்பட்டு வந்த தாய்லாந்து மன்னர் அக்டோபர் 2016 இல் 88 வயதில் இறந்தார். 70 ஆண்டுகால ஆட்சியில், கம்யூனிஸ்ட் கிளர்ச்சி, ஆட்சி கவிழ்ப்பு, தெரு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டார். இருப்பினும், கொந்தளிப்பான ஆட்சி காலத்திலும் நிலையான நபராக அடையாளம் காணப்பட்டார்.
ஆஸ்திரியாவின் ஃபிரான்ஸ் ஜோசப் I:
ஆஸ்திரிய பேரரசர் ஃபிரான்ஸ் ஜோசப், 1848 மற்றும் 1916 க்கு இடையில் ஏறக்குறைய 68 ஆண்டுகள் ஆட்சி செய்தார். சக்திவாய்ந்த ஹப்ஸ்பர்க் வம்சத்தின் தலைவர் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட பல இனக்குழுக்கள் வாழ்ந்த பகுதியை ஆட்சி செய்தார். ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலராகவும், அதன் வீழ்ச்சிக்கு காரணமான நபராக பார்க்கப்படுவதால், பலர் அவரை முதலாம் உலகப் போருக்குக் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரிட்டனின் ராணி விக்டோரியா:
ராணி எலிசபெத்தின் கொள்ளுப் பாட்டி, விக்டோரியா மகாராணி, 1837 முதல் 1901 வரை கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிரிட்டன் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது விக்டோரியாவே ஆட்சி புரிந்தார்.