மன்னர் சார்லஸ் நாளை அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து அரசராக அறிவிக்கப்படுகிறார். இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்தார். ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது. இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறவுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். அவருக்கு தற்போது 73 வயதாகிறது. ராணி மறைவுக்குப் பின்னர் சார்லஸ் தான் மன்னர் என்றாலும் கூட அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கிங்காம் அரண்மனையில் உள்ள புனித ஜேம்ஸ் பேலஸில் அக்சஷன் கவுன்சிலில் நடைபெறும் கூட்டத்தில் வெளியாகிறது.
ஜிஎம்டி நேரப்படி காலை 9 மணிக்கு இந்த கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மன்னர் சார்லஸ் ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திடுவார். இந்த நடைமுறைக்குப் பின்னர் பிரின்சிபள் ப்ரொக்லமேஷன் என்ற நிகழ்வு நடைபெறும்.
இளவரசர் சார்லஸ் டூ மன்னர் சார்லஸ்:
73 ஆண்டுகள் இளவரசராக இருந்துள்ளார் சார்லஸ். இங்கிலாந்து ராஜ குடும்ப வரலாற்றில் அதிக காலம் இளவரசராக இருந்தவர் இவர் தான் எனலாம். நாளை மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
சார்லஸ் பள்ளி, கல்லூரிகளில் சாதாரண அளவில் கற்றல் திறன் கொண்டவராகவே இருந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1970 பட்டம் பெற்றார். அதுவும் தர்ட் க்ளாஸிலேயே அவர் தேர்ச்சி பெற்றார். 1971 முதல் 1976 வரை இங்கிலாந்து கடற்படையான ராயல் நேவியில் பணிபுரிந்தார். அப்போது அங்கு அவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சார்லஸுக்கு கல்வி தான் சுமாராக அமைந்தது என்றால் காதலும் அப்படித்தான் அமைந்தது. அவர் முதலில் காதலில் விழுந்தது கமீலியாவுக்காக. ஆனால் ஒருகட்டத்தில் கமீலியா அவரைக் கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு திருமணம் செய்து கொள்ள குடும்பத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் அமண்டா நாட்ச்புல் என்பவருக்கு காதலைச் சொன்னார். ஆனால் அவரும் சார்லஸை நிராகரித்தார். இந்தச் சூழலில் தான் 1981 பிப்ரவரியில் சார்லஸ் டயானா ஸ்பென்சரை சந்தித்தார். அப்போது டயானாவுக்கு 19 வயது. 1981 ஜூலை 29ல் சார்லஸ், டயானா திருமணம் ஒரு ஃபேரி டேல் திருமணம் போல் கோலாகலமாக நடந்தது.
அவர்களின் முதல் குழந்தையாக ப்ரின்ஸ் வில்லியம் 1982ல் பிறந்தார். பிரின்ஸ் ஹாரி 1984ல் பிறந்தார். ஆனால் அதற்குள்ளதாகவே சார்லஸ், டயானா திருமணத்தில் சிக்கல் இருந்தது. 1992 ஜூனில் சார்லஸ், டயானா தம்பதி பிரிந்தனர். 1996ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவகரத்து செய்தார். விவாகரத்து செய்த அடுத்த ஆண்டே டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் மகாராணி பெயர் அடிபட்ட நிலையில் கடைசி வரை உண்மைகள் கண்டுபிடிக்கப் படவில்லை. அவரது மரணத்தில் இப்போது வரை மர்மம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் கமிலா என்பவரை சார்லஸ் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில், ராணியாக கமிலா அரியணை ஏறுவார். இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்த காலத்தில் கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்ல உள்ளது.