இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் கடந்த 8-ந் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலம் லண்டனில் 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, லண்டன் மாநகரில் சற்றுமுன் மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.


முன்னதாக, ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரா அரண்மனையில் உயிர்பிரிந்த ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ராணியின் உடலுக்கு 24 மணி நேரமும் அரண்மனை பாதுகாவலர்கள் பாதுகாவலுக்கு இருந்தனர். இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டு மக்களும் ராணிக்கு மணிக்கணக்கில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.




இந்த நிலையில், ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-விற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது. இங்கிருந்து விண்ட்சர் கோட்டைக்கு ராணியின் உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லறை ஜெபம் நடைபெற உள்ளது.






ராணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதால், வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதி இன்று காலையிலே முடிவுக்கு வந்தது. ராணியின் உடல் கடற்படை பீரங்கி வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட உள்ளது. 142 மாலுமிகள் இதை இழுத்துச்செல்வார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை பீரங்கி வண்டியில் வைத்து மாலுமிகள் இழுத்துச் செல்கின்றனர்.




இந்த ஊர்வலத்தில் பீரங்கி வண்டிக்கு பின்னால் புதிய மன்னர், இளவரசர்கள் ஆகியோர் சென்று கொண்டிருக்கின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கு சென்ற பிறகு இறுதிச்சடங்கு ஜெபக்கூட்டம் தொடங்க உள்ளது. இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, அபேவில் இருந்து ஹைட் பார்க் முனையில் உள்ள வெலிங்டன் வளைவு வரை ராணியின் சவப்பெட்டியை வீரர்கள் தூக்கிக்கொண்டு செல்வார்கள்.


ராணுவ வீரர்களும், போலீசாரும் அணிவகுப்பு நடத்த துப்பாக்கி குண்டுகள் முழங்கம். இறுதியாக பல்வேறு சடங்குகள், அணிவகுப்புகள் நிறைவு பெற்ற பிறகு ராணி எலிசபெத் உடல் புனித ஜார்ஜ் தேவாயலத்திற்குள் இடம்பெற்றுள்ள ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.


ராணியின் இறுதி ஊர்வலத்திற்காக உலகத்தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் குவிந்திருப்பதால் லண்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.