அமெரிக்காவின் பிரபல பாடகர் போஸ்ட் மலோன் மேடையில் பாடிக்கொண்டிருந்த பொழுதே கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்ட் மலோன் என்று அழைக்கப்படும் ஆஸ்டின் ரிச்சர்ட் போஸ்ட் ஒரு ராப்பர் , பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் பாப், ஹிப் ஹாப், ஆர்&பி மற்றும் ட்ராப் உள்ளிட்ட பாடல்களை கலந்து பாடுவதில் கெட்டிக்காரர். அதுவும் பல குரல்களில் பாடுவார்.அதுதான் போஸ்ட் மலோன் தன் பக்கம் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருக்க காரணம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17 அன்று செயின்ட் லூயிஸில் உள்ள எண்டர்பிரைஸ் சென்டரில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் பாடகர் போஸ்ட் மலோன் மேடையில் தவறி விழுந்துவிட்டார்.
அதனால் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதனால் உடனடியாக நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. TMZ இன் கூற்றுப்படி, அவரது கிட்டாருக்காக பயன்படுத்தப்பட்ட மேடையில் உள்ள துளை மூடாமல் இருந்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கீழே விழுந்த போஸ்ட் மலோன் எழுந்து நின்ற பொழுது அவரது கால்கள் இரண்டும் நடுக்கத்துடன் காணப்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் விரைந்து வந்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அதன் பிறகு மேடையில் இருந்து வெளியேறியவர் மைக்கில் தனது ரசிகர்களிடம் தனக்கு இரண்டு நிமிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மேடைக்கு வந்தவர் தனது மற்ற இரண்டு பாடல்களான ராக்ஸ்டார் மற்றும் கூப்ட் அப் பாடலைப் பாடி நிகழ்ச்சியை முடித்து வைத்தார். மேலும் மேடையில் இருந்த துளை குறித்து , தனது பாணியில் கமெண்ட் அடித்துவிட்டு சென்றிருக்கிறார். இக்கட்டான சூழலையும் சிறப்பாக கையாண்ட பாடகருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
அவர் சமயம் கீழே விழும் வீடியோ , டிக்டாக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகவே அவரது ரசிகர்கள் போஸ்ட் மலோன் குறித்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும் "Twelve Carat Tour" நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்துக்கொள்வார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொலம்பஸுக்குப் பிறகு, போஸ்ட் மலோனும் டொராண்டோ உட்பட பிற இடங்களில் நிகழ்ச்சி நடத்த உள்ளார், அதன் பிறகு பாடகர் பாஸ்டன், கிளீவ்லேண்ட் மற்றும் பிட்ஸ்பர்க் போன்ற இடங்களில் நிகழ்ச்சியை நடத்துவதற்காக அமெரிக்கா திரும்பவுள்ளார். முன்னதாக அவரது “"பன்னிரண்டு காரட் சுற்றுப்பயணம் “ ஓமாஹாவில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.