இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந் தேதி காலமானார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலம் இன்று லண்டனில் நடைபெறுகிறது. அவரது இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


உலகத்திலே அதிக காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற மாபெரும் பெருமையை தன்வசம் வைத்திருப்பவர். உலகம் முழுவதும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இங்கிலாந்து நாட்டிற்கே மகாராணியாக வலம் வந்த எலிசபெத்தின் மறைவால் அந்த நாட்டு மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்.




சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 1926ம் ஆண்டு பிறந்தவர். ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றது முதல், அரச வாரிசாக முன்னிறுத்தப்பட்ட எலிசபெத் 1952ம் ஆண்டு மகாராணியாக பொறுப்பேற்றார். கென்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பட்டத்து இளவரசி எலிசபெத் உடனடியாக நாடு திரும்பி, பட்டத்து ராணியாக முடிசூடினார்.


உலக நாடுகளை உலுக்கிய இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் முக்கியப் பங்கு வகித்தது. அப்போது, இளவரசியாக இருந்த எலிசபெத்தின் தாயார் போரின் நிலை என்னவாகினும் நாட்டை விட்டு வெளியேற மறுத்து இங்கிலாந்திலே இருந்தார். அப்போது, எலிசபெத்திற்கு 14 வயது மட்டுமே. அப்போது, இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக எலிசபெத் வானொலியில் உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று எலிசபெத் ஆற்றிய உரை அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தது. இந்த ஒற்றை நிகழ்வு மூலம் ராணி எலிசபெத் தனது சிறுவயது முதல் எந்தளவு பொறுப்புணர்வுடன் இருந்தார் என்பதை அறிய முடிகிறது.




அது மட்டுமின்றி, உலகப்போரின்போது அரண்மனையில் இருக்கும் இளவரசியாக எலிசபெத் இருக்க விரும்பவில்லை. மக்களுக்காக களத்தில் இறங்கி போராட விரும்பிய எலிசபெத், உலகப்போரின்போது இங்கிலாந்து பெண்கள் ராணுவப் பிரிவில் பணியாற்றினார். பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றிய முதல் அரச குடும்பத்து பெண் என்ற பெருமையையும் எலிசபெத் அடைந்தார்.


அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை கடைசி வரை கடைப்பிடிப்பதில் ராணி எலிசபெத், மற்ற அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகவே இருந்தார். விவரம் தெரிந்தது முதல் இறக்கும் வரை ராணி எலிசபெத் அரச குடும்பத்தின் விதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினார். உடை, நகை, கடிகாரம் என நவநாகரீக ராணியாக உலா வந்த எலிசபெத், இங்கிலாந்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் அரும்பங்காற்றினார். ராணி எலிசபெத் தான் ராணியாக ஆட்சி செய்த காலத்தில் 15 இங்கிலாந்து பிரதமர்களை பார்த்துள்ளார். 


உலகத் தலைவர்கள் எல்லாம் பெரு மரியாதை வைத்திருந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கத்திற்காக லண்டன் மாநகரம் முழுவதும் உலகத் தலைவர்களும், பல்வேறு நாட்டு மக்களும் வேதனையுடன் குவிந்துள்ளனர். 


மேலும் படிக்க : Queen Elizabeth: உலகப்புகழ்.. தன்னடக்கம்..யார் இந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்..?