ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக வலம்வந்த இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு பணம், கொடி, தேசிய கீதம் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் பணியாற்றியவர் இரண்டாம் எலிசபெத். ஐக்கிய ராஜ்ஜியத்தை 63 ஆண்டு காலம் ஆண்டிருந்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாம் எலிசபெத், 54 காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் இருந்து உயிரிழந்துள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது போலவே நடத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக, இங்கிலாந்தின் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

மாற்றம்:

 

இந்த நிலையில், இங்கிலாந்து அரசின் பணம், தேசிய கீதம், கொடி மற்றும் தபால் துறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. இங்கிலாந்து அரசு அதன் 1100 ஆண்டுகால தொடர் ஆட்சியை குறிக்கும் வகையில் பணம் மற்றும் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. அதைப் போலவே மகாராணி எலிசபெத்தின் படம் அடங்கிய பணம் மற்றும் நாணயங்கள் வெளியிடப்பட்டு வந்தது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை அவரது உருவம் அடங்கிய புதிய நாணயங்கள் மற்றும் பணங்கள் வெளியாகும். தற்போது எலிசபெத் மறைந்த நிலையில், அரசர் சார்லஸின் புகைபப்டம் நாணயம் மற்றும் பணங்களில் வெளியாக இருக்கிறது.  எலிசபெத் ராணியின் முகம் வலது பக்கம் நோக்கி இருக்கும் வகையில் பணம் மற்றும் நாணயங்கள் இருக்கும் நிலையில், சார்லஸின் முகம் இடது பக்கம் நோக்கி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. கடந்த 300 ஆண்டுகளாக இந்த முறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. எலிசபெத்தின் தந்தை ஜார்ஜின் முகம் இடது பக்கம் நோக்கியவாறு அமைக்கப்பட்டிருந்த நிலையில், எலிசபெத்தின் முகம் வலது பக்கம் நோக்கியவாறு அமைக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. ஐக்கிய அரசு பணத்தில் எலிசபெத்தின் முகம் தான் முதன் முதலில் இடம்பெற்றது. 1956ல் இதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு கருவூலம் வழங்கியது. அதற்கு அடுத்ததாக தற்போது சார்லஸின் முகம் தான் இடம்பெறப்போகிறது.

 

தேசிய கீதத்தில் மாற்றம்:

 

அதேபோல, ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய கீதமும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. கடவுள்தான் ராணியை காக்கிறார் என்ற தேசிய கீதம் கடந்த 70 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு கடவுள் அரசரை காக்கிறார் என்று பாடப்பட்டு வந்தது. சார்லஸ் தற்போது அரசராகப் பதவியேற்றிருக்கும் நிலையில் அரசி என்று வரும் இடங்களில் எல்லாம் அரசர் என்று மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது. கடவுளே எங்களுடைய அரசரைக் காப்பாற்று! எங்கள் உன்னதமான அரசர் நீண்ட காலம் வாழ வேண்டும். கடவுளே அரசரை காப்பாற்று. அவருக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் புகழைக் கொடு. எங்களை நீண்டகாலம் ஆட்சி செய்ய வேண்டும். கடவுளே எங்கள் அரசரைக் காப்பற்று” என்று மாற்றப்பட இருக்கிறது.

 

கொடியில் மாற்றம்:

 

தேசிய கீதத்தைத் தொடர்ந்து அரச கொடியும் மாற்றப்பட இருக்கிறது. நீல நிறப் பின்னணியில் ரோஜா பூக்கள் சுற்றியிருக்க, இ என்ற எழுத்தின் மேல் கிரீடம் அமைக்கப்பட்ட கொடியை எலிசபெத் ராணி பயன்படுத்தி வந்தார். தற்போது அந்த கொடியில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. தற்போது வேல்ஸில் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கொடியை பயன்படுத்த இருக்கிறார் சார்லஸ்.

 

தபால் ஸ்டாம்ப்:

 

முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது தபால் துறையின் சின்னங்களை மாற்றவிருப்பது. அரசர் நான்காம் ஜார்ஜ் ஆட்சியில் 1820ல் வடிவமைக்கப்பட்ட வைர கிரீடத்தை மகாராணிகள் அணிந்து வருகின்றனர். அந்த கீரீடம் அணிந்திருப்பது போன்று தபால் தலைகள் வெளியிடப்பட்டு வந்தன. இரண்டம் எலிசபெத் வைர கிரீடத்தை அணிந்த ஸ்டாம்புகள் தான் இதுவரை பயன்படுத்தப்பட்டுவந்தது.  அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது இங்கிலாந்து ராணி தனது ஆட்சியின் பிளாட்டினம் ஜூப்லியை கொண்டாடியபோது பத்து விதமான ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சார்லஸ் அரசராகப் பதவியேற்றிருப்பதால், சார்லஸின் முகம் அடங்கிய ஸ்டாம்புகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.