மலைப்பாம்பு ஒன்று, ஒரு முழு மானை வெகு சில நொடிகளில் விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை உறைய வைத்து வருகிறது.
உலகில் ஆச்சர்யத்தையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கக்கூடிய உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள். நேரில் நம்மை உறைய வைத்து முதுகை சில்லிட வைக்கும் அதே அனுபவத்தை பாம்புகள்
வீடியோக்களிலும் வழங்குகின்றன.
அந்த வகையில் முன்னதாக வெகு சில நொடிகளில் வளர்ந்த முழு மானை மலைப்பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது.
மானை விழுங்கும் மலைப்பாம்பின் வயிற்றை அருகில் நிற்கும் நபர்கள் தட்டிக் கொடுத்து உதவுவதும் (?!) இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இதேபோல் முன்னதாக கான்பூரில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது கான்பூர். கான்பூரில் அமைந்துள்ளது சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம். வேளாண் பல்கலைகழகம் என்பதால் இந்த பல்கலைகழகத்தை சுற்றி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் வழக்கம்போல அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மிகப்பெரிய உருவம் ஒன்று தரையில் கிடப்பதை பார்த்துள்ளனர். அருகே சென்று பார்த்தபோதுதான் அது மலைப்பாம்பு என்றும், அதன் வயிற்று பகுதி மட்டும் பெரியளவில் வீங்கியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, அந்த பாம்பை பிடிப்பதற்காக குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்தனர். ஆனால், பாம்பின் எடை மற்றும் மலைப்பாம்பு என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மலைப்பாம்பின் வயிற்று பகுதி இவ்வளவு பெரியதாக வீங்கியிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பகுதியில் உள்ள ஆடு ஒன்றை 15 அடி உயரம் கொண்ட இந்த மலைப்பாம்பு விழுங்கியிருப்பதை கண்டறிந்த அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இந்த பாம்பை பிடிக்க மிகவும் சிரமப்பட்டனர். பின்னர், அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த மலைப்பாம்பை அதிகாரிகள் பிடித்தனர்.
முழு ஆடும் பாம்பின் வயிற்றுப் பகுதியில் இருந்ததால் மலைப்பாம்பின் எடை மிகவும் உயர்ந்து இருந்தது. இதையடுத்து, பாம்பை சிரமப்பட்டு பிடித்த வனத்துறை அதிகாரிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பாம்பை விட்டுச் சென்றனர். பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்தபோது பாம்பு நகர முடியாமல் ஒரு இடத்தில் கிடந்ததை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 15 அடி உயரம் கொண்ட மலைப்பாம்பு உயிருடன் உள்ள ஆட்டையே விழுங்கியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.