அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் பிரபல ராப் இசை பாடகரான டேக்ஆஃப் மர்ம நபர்கள் சிலரால் சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு வயது 28.


பகடைக்காய் விளையாட்டின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் டேக்ஆஃபின் தலை மற்றும் கழுத்துக்கு பக்கத்தில் குண்டு பாய்ந்ததாக தெரிகிறது.
இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அப்போது அந்தப் பகுதியில் 50 பேர் வரை இருந்ததாகவும், இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடந்தபோது, டேக்ஆஃப்பின் உறவினர் குவாவோ, மிகோஸ் ராப் இசை குழுவின் மற்றொரு நபர் ஆகியோர் பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.






யார் இந்த டேக்ஆஃப்?


ஜார்ஜியாவின் லாரன்ஸ்வில்லே பகுதியில் பிறந்தார் டேக்ஆஃப். இவரது இயற்பெயர் கிர்ஷ்னிக் காரி பால்.
2008-ம் ஆண்டு ராப் இசையில் தனது உறவினருடன் தன்னை இணைத்து கொண்டார். 2011-ம் ஆண்டில் இந்த குழுவினர் மிகோஸ் என்ற பெயரிலான ராப் இசை குழுவை தொடங்கினர்.


அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சுடுதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவது அமெரிக்கர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவரது மறைவுக்கு அமெரிக்காவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.