ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தற்போது மாஸ்கோவில் இருக்கும் அவர், சரியான தேதிகளை குறிப்பிடவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் அது நடக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்ட ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அஜித் தோவல் கூறியது என்ன.? பார்க்கலாம்.
“புதின் இந்தியா வரும் தேதிகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன“
ரஷ்ய அதிபரின் இந்திய வருகை குறித்து பேசியுள்ள அஜித் தோவல், "எங்களுக்கு ஒரு சிறப்பான, நீண்ட கால உறவு உள்ளது, மேலும் இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். எங்களுக்கு உயர்மட்ட ஈடுபாடுகள் உள்ளன, மேலும், இந்த உயர் மட்ட ஈடுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. அதிபர் புதினின் இந்திய வருகை பற்றி அறிந்து நாங்கள் மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைகிறோம். தேதிகள் இப்போது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை, புதினின் இந்திய வருகை குறித்து மாஸ்கோவிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பாக, அமெரிக்கா - இந்தியா இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், புதினின் இந்த சுற்றுப்பயண அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தியை வாங்குவதன் மூலம், உக்ரைன் மீதான மாஸ்கோவின் போருக்கு இந்தியா உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தடம் புரளச் செய்துள்ளது.
இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம்
இந்தியாவும் ரஷ்யாவும் நீண்டகால உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், சோவியத் சகாப்தம் முதலே தொடர்கின்றன. பல ஆண்டுகளாக, இரு நாடுகளும் தங்கள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. இருதரப்பு வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத உயரங்களை தற்போது எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் உடனான போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. மே 2023 வாக்கில், இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை அல்லது அதன் இறக்குமதியில் தோராயமாக 45 சதவீதத்தை வாங்கியது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளை எச்சரித்த ட்ரம்ப்
இந்தியா, ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். உக்ரைனில் நான்காவது ஆண்டாக நடைபெற்று வரும் போரை வெள்ளிக்கிழமைக்குள் நிறுத்த ரஷ்யா ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்களுக்கு இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
டிரம்ப் - புதின் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இதனிடையே, வரும் நாட்களில் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக, ரஷ்ய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. ரஷ்ய அதிபரின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சந்திப்பை அமைப்பதற்காக பணியாற்றி வருவதாகவும், சந்திப்புக்கான இடம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சந்திப்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவர்களின் இந்த சந்திப்பால், இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சண்டைக்காரர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதால், அவர்களது சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஒரு விமோசம் கிடக்குமா என்ற எதிர்பார்ப்புதான் அது. புதின் இந்தியா வருவதற்கு முன்னரே அந்த சந்திப்பு நிகழும் என தெரிகிறது. அப்போது, இந்தியாவிற்காக புதின் பேசுவார் என நம்பலாம். அதற்கு ட்ரம்ப்பும் ஒப்புக்கொண்டால், இந்தியா தப்பிக்கும். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.