ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவததை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதலாக வரி விதிப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்தியா அதற்கு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், தற்போது இந்தியாவிற்கு கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் ட்ரம்ப். இதனால், இந்தியாவிற்கான மொத்த வரி, தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு 25% கூடுதல் வரி - கையெழுத்திட்ட ட்ரம்ப்
அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருநது இந்தியாவிற்கு ட்ரம்ப் ஏற்கனவே விதித்திருந்த 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால், கூடுதல் வரி விதிப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், இந்தியா அதை நியாயமற்றது எனக் கூறியது. இந்தியாவிற்கு ஆதரவாக, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் குரல் கொடுத்தன. இந்நிலையில், நேற்று தான் அறிவித்தது போல், இன்று இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்து, அதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் நேற்று கூறியது என்ன.?
அமெரிக்காவில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப், "இந்தியா ஒரு நல்ல வர்த்தக பங்காளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே, நாங்கள் வரியை 25 சதவீதமாக முடிவு செய்தோம். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன், ஏனென்றால் அவர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறார்கள்," என்று தெரிவித்திருந்தார்.
அதோடு, தெற்காசிய நாடு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி, இந்தியா மீதான அமெரிக்க வரிகளை "கணிசமாக" உயர்த்தப் போவதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்த ட்ரம்ப், அடுத்த 24 மணி நேரத்தில் வரியை உயர்த்துவேன் என கெடு விதித்திருந்தார்.
ஆனால், அதற்கு இந்தியா தரப்பிலிருந்து எதிர்ப்பு மட்டுமே வந்தது. அமெரிக்காவிற்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இந்தியாவிற்கான வரியை தற்போது மேலும் 25 சதவீதம் உயர்த்தி, அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்.
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
ஒருபுறம் நண்பனான ரஷ்யாவை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கும் இந்தியா, மறுபுறம் ட்ரம்ப்பிடமிருந்து தப்பிப்பதற்கான வழியும் தெரியாமல் திண்டாடி வருகிறது. இந்தியா சாதகமான பதிலை அளிக்கும் வரை, ட்ரம்ப்பும் விடுவதாக தெரியவில்லை.
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பயந்து ரஷ்யாவை பகைத்துக் கொள்ள இந்தியாவிற்கு மனமில்லை. ட்ரம்ப்பின் இந்த இமாலய வரி விதிப்பால், இந்தியாவிற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.