தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்ட டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய 4 பகுதிகளிலும் புதிய ராணுவச் சட்டம் அமலுக்கு வருவதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது. முதலில் மூன்று நாட்கள் நடந்த தாக்குதல் வேகத்தைப் பார்த்தபோது இதுதான் மிகச்சிறிய போராக இருக்கும். உக்ரைன் சீக்கிரம் வீழ்ந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பலவும் ஆதரவுக் கரம் நீட்டின. இன்றுவரை அமெரிக்கா பெருமளவில் ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு செய்து வருகிறது. இதனால் ஆரம்பத்தில் கீவ் நகர் வரை சென்ற ரஷ்ய ராணுவம் பின்னர் படிப்படியாக பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள் விளங்குகின்றன. இது 2014 முதல் பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்தே, ரஷிய தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் தன்னுடன் இணைத்துக் கொண்ட டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய 4 பகுதிகளிலும் புதிய ராணுவச் சட்டம் அமலுக்கு வருவதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
கெர்சன் பகுதியில் ரஷ்யா அதிகாரிகளை நியமித்த அடுத்த நாளில் இந்த நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. கெர்சன் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு புதிய அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர். அங்கு உக்ரைன் தாக்குதலை அதிகரிக்கூடும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது 4 பிராந்தியகளில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதால் அங்கு ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
போரின் பின்னணி:
1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உக்ரைன் சேர்வதற்கான முயற்சிகளைத் தனது பாதுகாப்புக்கான பெரும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் மக்களில் ஒருசாராரிடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் ஆர்வம் இருக்கிறது. சோவியத் ஆட்சிமுறையில் கட்டுப்பாடுகளை அனுபவித்த அம்மக்கள், ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.
இதனால், உக்ரைன் அதிபர் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வதற்கு முன்மொழியும் தலைவருக்கே கூடுதல் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் அங்கு உருவாகவில்லை. குறிப்பாக, அதன் வளர்ச்சி பெறாத பொருளாதாரம், வலுப்பெறாத ஜனநாயக அமைப்பு, அரசுக்கு எதிராக நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் உக்ரைன் இன்றுவரை நேட்டோவில் இணைவதில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை.