சிலி நாட்டு நகரம் ஒன்றில் திடீரென மேகம் ஊதா நிறத்துக்கு மாறியது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. பிலடெல்ஃபியாவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான அல் தியா இது குறித்து முன்னதாக செய்தி பகிர்ந்துள்ளது.


சிலியில் போசோ அல்மோண்டே பகுதியில் மேகங்கள் ஊதா நிறத்தில் திரண்டு நிற்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் முன்னதாக அப்பகுதி உள்ளூர்வாசிகள் பகிர்ந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.






முன்னதாக, நகருக்கு மிக அருகில் உள்ள காலா காலா சுரங்கத்திலிருந்து இந்த மேக மூட்டம் உருவானதாகவும், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சுரங்கத்தின் பூஸ்டர் பம்பின் மோட்டார் செயலிழந்ததால் இவ்வாறு நடந்துள்ளதாகவும் இச்செய்தியை வெளியிட்ட அல் தியா மேற்கோள் காட்டியுள்ளது.


இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட பம்ப் செயலிழப்பால், ஆலையில் அயோடின் திட வடிவில் இருந்து வாயு நிலைக்கு மாறியதாகவும், இதனால் ஊதா நிறத்தில் வானம் மாறியதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அதிகாரி இமானுவேல் இபர்ரா தெரிவித்துள்ளார்.






மேலும் மருத்துவரீதியாக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை சரியாகப் பின்பற்றியதா என ஆராய்ந்து வருவதாகவும் இமானுவேல் இபர்ரா தெரிவித்துள்ளார்.


இந்த மேகங்கள் தோன்றி சுமார் 48 மணி நேரத்துக்குப் பிறகு மறைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல், இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் கச்சார் கிராமத்தில் ஊர் பொதுக்குழாயில் தண்ணீரோடு சேர்ந்து தீப்பிழம்பும் வெளிப்பட்ட சம்பவம் முன்னதாக உள்ளூர்வாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஸ்வாஹா பஞ்சாயத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கச்சார் அமைந்துள்ளது.






இங்கு பொதுக் குழாய் பம்ப் தண்ணீருடன் சேர்த்து தீயையும் கக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமவாசிகள் பயந்துபோய் இந்த வீடியோவில் முனகும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருப்பதாகவும், உள்ளூர் நிர்வாகம் விரைந்து குழு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக விளக்கப்படாத நிலையில், நிலத்திற்கு அடியில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய மீத்தேன் வாயு வெளியிடப்பட்டிருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.