பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வரலாற்று மழை மற்றும் வெள்ளத்தால் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் காலநிலை அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் இருந்து, பருவமழை மற்றும் வெள்ளத்தில் 900 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிவு பதிவாகி உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் காலநிலை அமைச்சர் கூறுகையில், கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரலாறு காணாத பேரிடரை எதிர்த்து அரசு போராடி வருகிறது என்றார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தான் கூடுதல் சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்ந்து பேசிய காலநிலை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், "பாகிஸ்தான் இப்போது எட்டாவது பருவமழை சுழற்சியை கடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நாட்டில் பொதுவாக மூன்று முதல் நான்கு சுழற்சிகளாக மட்டுமே மழை பெய்யும். அதிக வெள்ள நீரோட்டங்களின் சதவீதம் அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
கோடை காலம் தொடங்கியதில் இருந்து, பல பருவமழை சுழற்சிகள் பாகிஸ்தானை தாக்கியுள்ளன. இதனால் பெரு வெள்ளம் நாடு முழுவதும் 400,000 வீடுகளை அழித்துள்ளது. குறைந்தபட்சம் 184,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். "இந்த நேரத்தில் மக்கள் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என ஐநாவின் பேரிடர் நிவாரண நிறுவனமான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வியாழக்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை இயற்கைப் பேரழிவால் மூன்று மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் அஹ்சன் இக்பால், "சுமார் 30 மில்லியன் மக்கள் - அல்லது சுமார் 15% மக்கள் - பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
தெற்கு பாகிஸ்தான் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சிந்து மாகாணம் அதன் சராசரி ஆகஸ்ட் மாத மழைப்பொழிவை விட எட்டு மடங்கு அதிகமாகப் பெற்றுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கு ஒரு மில்லியன் கூடாரங்களை உள்ளூர் அலுவலர்கள் கேட்டுள்ளதாக ரெஹ்மான் வியாழக்கிழமை தெரிவித்தார்.