பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்க உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பஞ்சாப் உள்துறை அமைச்சர் அட்டா தரார், "இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பது சமூகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. பஞ்சாபில் தினமும் நான்கைந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாள்வதற்காக அவசர நிலையை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு சாரா அமைப்புகள், பெண்கள் உரிமை அமைப்புகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படுவார்கள். பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கை செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பிரசாரத்தை அரசு தொடங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எச்சரிக்கப்படுவார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள் குறையும்.
பாகிஸ்தான் பாலின வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களால் பெரும் பாதிப்படைந்துள்ளது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 156 நாடுகளில் பாகிஸ்தான் 153ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடைசி இடங்களை ஈரான், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தானில் 14,456 பெண்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளதாக உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற பாரபட்சமான செயல்களும் அதிகளவில் நடந்துள்ளன.