ஐரோப்பிய நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப் போட்டுள்ளது உக்ரைன் தாக்குதல். இதற்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் கண்டனம் எழுந்துவரும் நிலையில் அன்மையில் இந்த நெருக்கடிக்கு எதிராக நடிகர் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார். அவர் நிலைமை 'திகிலூட்டுகிறது' என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர்களுக்கு உதவ யுனிசெஃப் சார்பாக பங்களிப்பைக் கோரியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுரங்கப்பாதைப் பகுதிகளை நிலத்தடி பதுங்கு குழிகளாக மாற்றியதைக் காட்டும கவரேஜ் வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்,”“உக்ரைனில் நிலைமை பயங்கரமானதாக உள்ளது. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் அப்பாவி மக்கள் தங்கள் உயிருக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்காகவும் அங்கே பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நவீன உலகில் இப்படியொரு பேரழிவு நிகழ்வதைப் புரிந்துகொள்வது கடினம், ஆனால் இது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரு சூழல். இந்த போர் சூழலில் அப்பாவி உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன. அவர்களும் உங்களைப் போன்றவர்கள். உக்ரைன் மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றிய கூடுதல் தகவல் எனது பயோவில் உள்ள இணைப்பில் உள்ளது.” என ஒரு இணைப்பைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.
இதற்கிடையே,
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் நடத்திய பாதுகாப்புத் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.