பிரதமர் மோடிக்கு எத்தியோப்பிய நாட்டின் மிக உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-எத்தியோப்பியா கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பிற்காகவும், உலகளாவிய அரசியல்வாதியாக அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவ திறமைக்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் பயணமாக டிசம்பர் 16ம் தேதி எத்தியோப்பியா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அடிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இதனைத் தொடர்ந்து விருது பெறும் புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, எத்தியோப்பியாவின் நிஷான் என்ற பெரிய கௌரவ விருதைப் பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன். இதை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்த விருதைப் பெறுவது தனக்கு ஒரு மரியாதை” என பெருமிதம் தெரிவித்தார். தனக்கு இந்த கௌரவத்தை அளித்த எத்தியோப்பியா பிரதமர் அபி மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் எத்தியோப்பியா நாட்டின் தேசிய ஒற்றுமை, தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை பாராட்டி அந்நாட்டு பிரதமர் அபிக்கு, பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். எத்தியோப்பியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பாக்கியம் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் இருதரப்பு உறவுகளை பல ஆண்டுகளாகப் பேணி வந்த இந்தியர்கள் மற்றும் எத்தியோப்பியர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். விருது பெற்ற பிரதமர் மோடியை புகழ்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி, எத்தியோப்பியா பிரதமர் அபியுடன் இருதரப்பு உறவு, வர்த்தகம் குறித்து கலந்துரையாடினார். அப்போது மருந்து தயாரிப்புகள், டிஜிட்டல் சுகாதாரம், மருத்துவ சுற்றுலா மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை பற்றி விவாதம் நடத்தியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எரிசக்தி மற்றும் முக்கிய தொழில்கள் போன்ற துறைகள் பற்றியும் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.