ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடியிடம் தேசபக்தி பாடலை சிறுவன் ஒருவன் பாட அதை சொடக்குப்போட்டு பிரதமர் ரசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கான 65 மணிநேர சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி இன்றுத் தொடங்குகிறார். பிரதமரின் மூன்று நாள் பயணத்தில் மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக அவர் இன்று ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சென்றடைந்தார்.


பிரதமரை வரவேற்பதற்காக இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் அங்கு பெருமளவில் கூடியிருந்தனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் அங்கு கூடியிருந்தனர். அப்போது பிரதமரை வரவேற்க வந்திருந்த ஒரு சிறுவன், “ஹே ஜன்ம பூமி பாரத் ஹே கர்மா பூமி பாரத்” என்ற பாடலை பிரதமர் மோடி முன்பு பாடினார். இதனை ரசித்துக் கேட்ட பிரதமர் மோடி, சிறுவன் பாடும்போது சொடக்குப் போட்டு ரசித்து சிறுவனை உற்சாகப்படுத்தினார். சிறுவனின் குரல்வளத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, அவரை ஆசிர்வதித்தார். 






அதேபோல பிரதமரை வரவேற்க காத்திருந்த மாணவர்கள் இரண்டு பேர், பிரதமரின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். அவர்களை தட்டிக்கொடுத்த பிரதமர் மோடி அவரும் வணங்கி பதில் மரியாதை செய்தார். மற்றொரு சிறுமி தனது கையால் வரைந்த பிரதமரின் ஓவியம் ஒன்றை பிரதமருக்குப் பரிசளித்தார். அதைப் பார்த்து வியப்படைந்த பிரதமர், சிறுமியிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அந்த ஓவியத்தில் தனது ஆட்டோகிராஃபை போட்ட அவர் அந்த ஓவியத்தை சிறுமிக்கே மீண்டும் பரிசளித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில், பெர்லினில் இன்னும் விடியவில்லை. ஆனால் இந்திய வம்சாவளி மக்கள் பலர் காத்திருக்கின்றனர். அவர்களிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது புலம்பெயர்ந்த மக்கள் சாதித்ததை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது” என்று கூறியிருக்கிறார்.






பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் இதுவாகும். அதோடு, ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பித்தபிறகு முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது டென்மார்க்கில் நார்டிக் நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதோடு பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி, ப்ரான்ஸின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.