அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதிகளில் சீனா பெயர் சூட்டியமைக்கு, பெயர் சூட்டினால் சொந்தமாகிவிடுமா? என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அருணாச்சல் பிரதேசம்:
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல் பிரதேச மாநிலமானது, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கூறப்படும் திபெத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனாவுக்குத்தான் சொந்தம் என்றும் அவ்வப்போது சீனா தெரிவித்து வருவது தொடர்ந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்ற போது கூட, சீன ராணுவம் கண்டனம் தெரிவித்தது. இதற்கு இந்திய அரசும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், மலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சீனா நாட்டின் மொழிகளுள் ஒன்றான மாண்டரின் மொழியில் பெயர் சூட்டியது சீனா. அருணாச்சல பிரதேசத்துக்கு ஜாங்கன் என்றும் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
பெயர்களை மாற்றுவதால் பலன் இல்லை:
இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா? அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் மாநிலமாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும். பெயர்களை மாற்றுவதால் பலன் இல்லை. இந்திய இராணுவமானது, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், சமீபத்தில், சீனா மீண்டும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மீது உரிமை கோரியது. இந்திய மாநிலத்தை சீனாவின் ஒரு பகுதி" என்று கூறிய சீன பாதுகாப்பு அமைச்சகம், சட்டவிரோதமாக கருத்து தெரிவிக்கிறது.
ஒருங்கிணைந்த பகுதி:
இந்தியாவின் ஒருங்கிணைந்த அருணாச்சலப் பிரதேசத்தை ஜாங்கன் என்று அழைக்கப்படுவதை "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் மற்றும் உறுதியாக எதிர்க்கிறோம் என்று கூறினார்.
வடகிழக்கு மாநிலம் "இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி" என்றும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அருணாச்சலப் பிரதேச மக்கள் தொடர்ந்து பயனடைவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம் வைத்திருந்த நிலையில், அருணாச்சல் மாநிலம் , சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.