உலகம் முழுக்க பல விசித்திரமான நிகழ்வுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் மனிதர்களால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நமது பண்டைய வாழ்க்கை முறையின் நெறிகள் மற்றும் உண்மைகளைப் பற்றி அறிந்துகொள்ளச் சவாலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை இப்போது பெருவில் உள்ள ஒரு புதிய மம்மி உடல் ஈர்த்துள்ளது. இன்கான் கலாச்சாரம்தான் மம்மியின் பழம்பெரும் கலாச்சாரம் என்று கூறப்பட்டு வந்த காலம் சென்று பெரு நாடு மம்மிகளில் சமீப ஆண்டுகளாக பல வியக்கதகு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பெரு நாட்டின் லிமா என்னும் பகுதியில்தான் இந்த தொன்மையான மம்மிக்கள் கிடைத்துள்ளன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்கானுக்கு முந்தைய 14 மம்மிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவை 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. கிடைத்த மம்மிகளில் ஆறு குழந்தைகள் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உள்ளூர் உயரடுக்கிற்குள் உள்ள ஒரு முக்கிய நபரின் நினைவாக அவை பலியிடப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், பீட்டர் வான் டேலன் லூனா கூறுகையில், "இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக, அவரது நினைவாக மற்றவர்கள் பலியிடப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் கல்லறையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் இறந்தவர்களின் பாதையில், இறுதி இலக்கை நோக்கி அவருடன் செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. இறப்பவர்கள் உண்மையில் மறையாமல் வேறு உலகத்தில் வாழ்வதாக ஆண்டீன் சமூகங்கள் நம்பின. மரணம் ஒரு முடிவு அல்ல, அது ஒரு தொடக்கம், ஒரு இணையான உலகத்திற்கு ஒரு மாற்றம் என்று அவர்கள் நம்புகின்றனர்," என்றார்.
பீங்கான் பானைகள், அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் மற்றும் பின்னல் கருவிகளும் புதைக்கப்பட்ட தளத்தில் காணப்பட்டன. புதைக்கப்பட்ட இந்த உடலுடன் சேர்த்து இறந்த நபர் விண்ணுலக வாழ்வில் பயன்படுத்துவதற்கான படையல்களாக பல பொருட்களும், உணவுப் பொருட்களும் புதைக்கப்பட்டு இருந்தன என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மம்மியுடன் சேர்த்து அத்துடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்த மம்மியின் காலத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிவதற்காக ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம்தான் 1200 வருடங்களுக்கும் பழமையான மம்மிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மம்மிகள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களுக்கு புது விதமாக இருந்தது. அதே போன்று இப்போது கிடைத்த மம்மிகளிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.