போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மோட்டோ ஜிபி மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல் ஆலிவீரியா தனது ஒன்றுவிட்ட சகோதரியை மணந்தார்.
மோட்டோ ஜிபி என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பைக் ரேஸ். இந்த போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள ரைடர் போர்ச்சுகலைச் சேர்ந்த மிகுவெல் ஒலிவீரியா (26). இவர் தனது நீண்ட நாள் பெண் தோழி ஆண்ட்ரியா பிமென்டாவை (25) திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ள சூழலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால், இந்தத் திருமணம் அனைவராலும் வரவேற்கப்படவில்லை. காரணம், ஆண்ட்ரியா மிகுவெலின் ஒன்றுவிட்ட சகோதரி. இருவருக்கும் 11 ஆண்டுகளாகவே நெருக்கமான உறவு இருந்துள்ளது. 2019ல் இது வெளியுலகுக்கும் தெரியவந்தது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து மிகுவெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளோம். நாங்கள் எங்களின் காதலுக்கு திருமண வடிவம் கொடுத்துள்ளோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நான் எனது வாழ்க்கையை எனது மனைவியுடன் எனது மறுபாதியுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தனது காதல் கதை குறித்து தி சன் பத்திரிகைக்கு மிகுவெல் அளித்திருந்த ஒரு பேட்டியில், எங்களுக்குள் காதல் அரும்புவதற்கு முன்னதாக நீண்ட நாள் நட்பு இருந்தது. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். ஒருகட்டத்தில் எங்களுக்குள் நட்பைத் தாண்டியும் ஏதோ இருந்தது தெரிந்தது. அது ஆழமான காதல் என்பதைப் புரிந்து கொண்டோம். அடுத்த ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் மிகுவெலின் தந்தை பவுலோ, எனது இரண்டாவது மனைவியின் மகள் கிறிஸ்டினாவுடன் எனது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதகக் கூறினார்.
மிகுவெலின் சொந்த ஊர் போர்ச்சுகல் நாட்டில் தென் பகுதியில் உள்ள அலமாண்டா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இத்தாலியன் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். போர்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பட்டத்தை வெல்வது அதுவே முதன்முறையாக இருந்தது.
மிகுவெல் தனது சிறு வயதிலிருந்து மோட்டார் ரேஸ் பைக்குகளை இயக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மோட்டோ ஜிபி கிட்ஸ் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்தே போட்டி களத்துக்கு ஆண்ட்ரியா மிகுவெலுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆண்ட்ரியாவை மிகுவெலின் ஒன்றுவிட்ட சகோதரி என அறிந்திருந்த உலகம் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அறிந்திருக்கவில்லை. இருப்பினும் கடந்த 2, 3 ஆண்டுகளாக இது தொடர்பாக வதந்திகள் உலா வர, மிகுவெல் வெளிப்படையாக அதனை அறிவித்தார்.