ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் அங்கு புதிய ஆட்சி அமைய உதவத் தயாராக இருப்பதாக பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீதான கொள்கையை வகுக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடென், ஜி7 கவுன்சில் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இந்த சந்திப்பு ஆகஸ்ட் 24 (நாளை) காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதனை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பெஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் மீது ஜி7 நாடுகளின் ஒருமித்த கொள்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ள தத்தம் நாட்டவரை மீட்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ படைகளும் போர் புரிந்துள்ளது இந்தப் போரில் அமெரிக்காவுக்கு துணை நின்ற ஆப்கானிஸ்தான் நாட்டவர் பலர் தற்போது அச்சுறுத்தலில் உள்ளனர். அவர்களை மீட்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படியே ஆட்சி அமையும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் தேசத்தை இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும், ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதிய அரசில் ஹமீத் கர்சாயை இணைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தலிபான்கள் கையில் ஆட்சி சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும் அங்கிருந்து மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அண்டை நாடுகள் எல்லைகளைத் திறந்து வைக்குமாறு ஐ.நா.வும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகமே ஆப்கன் நிலவரத்தை உற்றுக் கவனித்து வரும் சூழலில் தான் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா ஜி7 நாடுகளுடன் முக்கிய ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன
அந்த வகையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜி7 நாட்டுத் தலைவர்களான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் தலிபான்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.