ஆட்சி மாற்றம் என்பது கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என முடிவு செய்யும் அளவுக்கான விவகாரம். சர்ச்சைகளுக்கும் சர்ப்ரைஸ் நிகழ்வுகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வரிசையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அப்படியான நிகழ்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் இது மூன்றாவது முறை. முதன்முறை ஐக்கியநாடுகள் திட்டமிட்டே முஜாஹிதீன் அமைப்பைக் கொண்டு 1992ல் அங்கே ஆட்சியைக் கைப்பற்றின. பிறகு 1996ல் இரவோடு இரவாக அகமது ஷா மசௌத் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியது. வருடம் 2021 வரலாறு அங்கே மீண்டும் திரும்பியிருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று மீண்டும் அங்கே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தலிபான்.
ஆனால் 1996ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்கும் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அதிகார நிலையில் பெரிதாக எந்த மாற்றத்தையும் அவர்கள் அறிவிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பெல்லாம் நிகழ்த்தி அமெரிக்கா, ஐரோப்பா என மேற்கத்திய நாடுகள் பாணியில் செய்தி அறிக்கையெல்லாம் விடுத்தார்கள். முந்தைய தலிபான்கள் போல ஆஃப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை அவர்கள் எதுவும் சேதப்படுத்தவில்லை.
இரண்டாவதாக, அதிகாரமாற்றம் பொறுமையாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அது முழு வடிவம் பெற இன்னும் சில நாட்களாகலாம். மூன்றாவதாக சர்வதேச நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த அதிகாரமாற்றத்தை எதிர்க்காமல் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த மாற்றத்துக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் இந்தியா கூட ஆஃப்கானில் உள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியிருந்தாலும் அந்த நாட்டுடனான தனது உறவு குறித்த தலிபான் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைப் பொருத்தே அறிவிப்பதாகக் கூறியுள்ளது.
இருந்தாலும் அமெரிக்கா இல்லாத ஒரு ஆஃப்கானிஸ்தானுக்கான சர்வதேசக் கொள்கையை வகுப்பதற்கான சரியான தருணம் இதுதான். ஆஃப்கானிஸ்தானில் தலிபான் ஆதிக்கத்தை பாகிஸ்தான் வரவேற்று இருக்கிறது. இன்னும் நட்புறவு ரீதியில் இம்ரான் கான் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு இந்தியா முந்திக்கொண்டு குறைந்தபட்சம் தலிபான்களோடு பேச்சுவார்த்தையாவது நடத்த இதுதான் தருணம். 90களில் நரசிம்மராவ் அதைத்தான் செய்தார். முஜாஹிதீன் அமைப்போடு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அவரிடம் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
96ல் தெரியவந்த தலிபான் அடிப்படைவாத அமைப்பாக அறிமுகமானாலும் இன்றைய தேதியில் ஆஃப்கானிஸ்தானின் பல்வேறு பழங்குடிக் குழுக்களிடையே அது ஊடுருவியுள்ளது. இன்றைய தேதியில் உள்நாட்டில் அது ஒருசாராரால் பழங்குடி இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான அந்த இனத்தின் ஆண்களால் நடத்தபடும் கூட்டமைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை தலிபான்களில் பெண் தலைமை என்னும் எட்டப்படாத கனவு நிறைவேறினால் அங்கே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்குக் கூட தீர்வுகள் கிடைக்கச் சாத்தியம் உண்டு.
Also Read: சென்னைக்கு எல்லோருமே ஒன்னுதான்... எல்லோருக்கும் சென்னை ஒன்னுதான்! ஹாப்பி பர்த்டே சென்னை!
1990களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தலிபான்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள் முக்கியமாக சவுதி அரேபியாவுடனான அவர்களது நட்புறவில் நிறையவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சவுதி அரேபியர்கள் பின்பற்றும் வகாபிஸம் என்னும் தீவிர அடிப்படைவாத மதநெறியோடு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் முன்பு இருந்தது போல சவுதி அரேபியாவுடன் தாங்கள் நட்புறவில் இல்லை என்றும் முல்லா ஒமரின் நெருங்கிய கூட்டளியான முல்லா கயிருல்லா கூறியிருந்தார். மரபார்ந்த இஸ்லாத்தையும் ஷரியத் சட்டத்தையும்தான் தாங்கள் பின்பற்றுவதாக அவர்கள் தங்களது அத்தனை ஊடகப் பேட்டிகளிலும் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். ஆஃப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி வெளியேறிய நிலையில் அவர் மீது அதிருப்தியில் இருந்த ஹமித் கர்சாய், அப்துல்லா அப்துல்லா உள்ளிட்டவர்கள் தலிபான்களின் சர்வதேச நாடுகளுடனான நட்புறவுப் பேச்சுவார்த்தைகளின் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல்கட்டமாக ஒரே சிந்தனை உடைய பாகிஸ்தானிடமிருந்து அது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான்கள் இந்தியாவுடனும் நட்புறவையே விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் சர்வதேச அரசியல் விமர்சகர்களின் பார்வைதானே ஒழிய இனிமேல் வரும் நாட்களில் தலிபான்களின் அனுகுமுறைகளைக் கொண்டுதான் அவர்கள் தலிபான் 2.0 அல்லது புதிய பேக்கேஜில் வந்திருக்கும் தலிபான் 1.0 எனத் தெரியவரும்.