பீகாரில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 6 புதிய விமான நிலையங்களை அமைக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் (AAI) ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 6 விமான நிலையங்கள்
மத்திய அரசின் பிராந்திய இணைப்புத் திட்டமான உதான் திட்டத்தின் கீழ், மதுபானி, சுபாலில் உள்ள பிர்பூர், முங்கர், பெட்டியாவில் உள்ள வால்மீகி நகர், முசாபர்பூர் மற்றும் சஹர்சா ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
விமான நிலையங்களை அமைக்க மாநில விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் AAI-க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த் கூறுகையில், "ஒவ்வொரு விமான நிலையத்தின் மேம்பாட்டிற்கும் ரூ. 25 கோடி என மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள வருமான வரி கோலம்பர் அருகே ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்காக குமார் இன்ஃப்ராட்ரேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு LoA வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பீகாருக்கு ஜாக்பாட்:
இந்த ஹோட்டல் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் உருவாக்கப்படும். மேலும், நிலம் 90 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும். பாட்னாவில் உள்ள பங்கிபூர் பேருந்து நிலையம் மற்றும் ஆர் கோலம்பர் அருகே மேலும் இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கட்டுவதற்கான ஏல நடைமுறைகளும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னாவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) ரூ.5,650 ஆகவும், கடுகுக்கு ரூ.5,950 ஆகவும், மசூர் ரூ.6,700 ஆகவும் அமைச்சரவை நிர்ணயித்துள்ளது. சிறப்பு துணை காவல் படையில் (SAP) பணியமர்த்தப்பட்ட 1,717 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் ஒப்பந்தம் 2025-26 வரை நீட்டிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் கால சிறப்பு பரிசு:
அரசுப் பள்ளிகள் மற்றும் நூலகங்களில் எழுத்தர்கள் மற்றும் நூலகர்களை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் அமைச்சரவை அங்கீகரித்தது. புதிய விதிகளின் கீழ், கல்வித் துறையில் 50 சதவீத எழுத்தர் பதவிகள் இப்போது கருணை அடிப்படையில் நியமனங்கள் மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 50 சதவீதம் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படும்" என்றார்.
வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வரும் சூழலில், ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.