கடந்த 1950களில் இருந்து, பிரான்ஸ் நாட்டில் பாதிரியார்களால் 2 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக வெளியான செய்தி கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து உண்மைகள் தனக்கு வலியை ஏற்படுத்தி இருப்பதாக போப் ஆண்டவர் தெரிவித்திருந்தார். இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார்.


பாலியல் வன்கொடுமைகளை குற்றமாக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அவர் முன்னதாக பேசியிருந்தார். இந்நிலையில், பாதிரியார்களுக்கான கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அவர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இணைய ஆபாச படங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ள அவர் இம்மாதியான படங்கள் பாதிரியார்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாகவும் பலவீனப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். வாடிகனில் நடைபெற்ற கூட்டத்தில் பாதிரியார்கள் மற்றும் பாதிரியார்களுக்கான கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசினார்.






சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக கிறிஸ்தவர்களாக இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு பதில் அளித்த போப் ஆண்டவர்,  "அதிகமாக செய்திகளை பார்ப்பதாலும் இசையை கேட்பதாலும் ஒருவரின் பணி பெரிய அளவில் தடைபடுகிறது" என பதில் அளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "இதில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இணையத்தில் உள்ள ஆபாசப் படங்கள். இணை ஆபாச படங்களை பார்க்கும் அனுபவம் உங்களுக்கு இருந்ததா அல்லது பார்ப்பதற்கு ஆசை இருந்ததா என்பதை ஒவ்வொருவரும் யோசித்து பாருங்கள். இது பல மக்கள், பல சாமானியர்கள், பல பாமரப் பெண்கள், மற்றும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் கூட இருக்கும் ஒரு தீமை.


சிறார் ஆபாட படங்கள் போன்ற ஆபாசத்தைப் பற்றி மட்டும் நான் பேசவில்லை. பாலியல் வன்கொடுமையின் நேரடி நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். அது ஏற்கனவே சீரழிவு. ஆனால், 'சாதாரண' ஆபாச படங்களும் பெரிய அளவில் சீரழிவை ஏற்படுத்துகிறது. அன்பான சகோதரர்களே, இதில் கவனமாக இருங்கள். ஒவ்வொரு நாளும் இயேசுவைப் ஏற்கும் தூய்மையான இதயம், இந்த ஆபாசத்தை ஏற்க கூடாது.


செல்போன்களில் இருக்கும் ஆபாச படங்களை டெலிட் செய்யுங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு சலனம் இருக்காது. பிசாசு அங்கிருந்துதான் நுழைகிறது. அது பாதிரியார்களின் இதயத்தை பலவீனப்படுத்துகிறது. ஆபாசத்தைப் பற்றி பேசியதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால், இதில் உண்மை இருக்கிறது" என்றார்.