உக்ரைன் - ரஷ்யா போர்:
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இதுவரை நிறைவடையவில்லை. ரஷ்யாவின் வலிமையால் சில நாட்களில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் 10 மாதங்களை எட்டியுள்ளது. அண்மையில், இந்த போர் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போர் ஒரு நீண்டகால போராக இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போரில் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அதோடு, சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தையும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஏற்படுத்தியுள்ளது.
போப் பிரான்சிஸ் வேண்டுகோள்:
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த போரை, உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் வாட்டிகன் சிட்டியில் தனது வாராந்திர பொது பார்வையாளர்களின் முடிவில் பேசிய போப் பிரான்சிஸ், நடப்பாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
”எளிமையாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்”
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு, அதனால் மிச்சமாகும் பணத்தை உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பசி மற்றும் குளிரில் உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக, உக்ரைனில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதை நாம் உறுதிமொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என, போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு:
அண்மையில் இத்தாலி தலைநகர் ரோம் சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை குறிப்பிட்டு பேசும்போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார். முன்னதாக, உக்ரைனுக்கு பிற நாடுகள் ஆயுதங்களை வழங்குவது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காப்பு என்பது "சட்டபூர்வமானது மட்டுமல்ல, நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடும் எனவும், ரஷ்யாவிற்கு எதிராக போப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் கடும் குளிர்:
இதனிடையே, உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை. இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போதைக்கு தொய்வை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.