இஸ்லாமிய மதத்தை மிக தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு 9 வயது பெண்கள் முதல் அனைத்து பெண்களும் இஸ்லாமிய மத அடிப்படைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  1979 நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் பெண்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தலை முதல் கழுத்துவரை மூடி இருக்க வேண்டும். அப்படி அணியவில்லை எனில் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டும் வந்தது. 


இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, காவல்துறையினரால் தாக்கப்பட்டார். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 16ஆம் தேதி மாஷா உயிரிழந்தார்.


இதையடுத்து, மாஷா உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு ஈரான் நாட்டு மக்கள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 23 வயதான மொஹ்சென் ஷெகாரி மற்றும் மஜித்ரேசா ரஹ்னாவார்ட் ஆகியோருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 






இந்தநிலையில், 26 வயதான ஈரானிய கால்பந்து வீரர் அமீர் நஸ்ர்-அசாதானி உட்பட 6 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக மரண தண்டனைக்கு காத்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து சர்வதேச தொழில்முறை கால்பந்து வீரர்களின் கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கால்பந்து வீரர் அமீர் நஸ்ர்-அசாதானி தனது நாட்டில் பெண்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்த பின்னர் ஈரானில் மரணதண்டனையை எதிர்கொள்ளப் போகிறார். நாங்கள் அமீருடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம், அவருடைய தண்டனையை உடனடியாக நீக்க வேண்டும்" என்று பதிவிட்டு இருந்தது. 






இதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை போராத்தில் 493 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.