இது லே ஆஃப் காலம் என்பது போல் ட்விட்டர், மெட்டா, அமேசான் என பல எம்என்சி நிறுவனங்களும் ஊழியர்களை தயவு தாட்சன்யம் இல்லாமல் வேலையைவிட்டு அனுப்பிவரும் சூழலில் சிஸ்கோ நிறுவனமும் தன் பங்கிற்கு வேலை நீக்கத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை அதாவது தனது மொத்த ஊழியர்கள் அளவில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிஸ்கோ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ரைட்ஸைசிங் என்ற பெயரில் இதனை மேற்கொள்கிறது. சிலிகான வேலி என்ற தொழில்துறை இதழில், சிஸ்கோ லே ஆஃப் தொடங்கிவிட்டதாகவும். இதனை பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்களே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வேறு வேலைக்கான பரிந்துரைகளை வெளிப்படையாக கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சிஸ்கோவின் சிஇஓ மற்றும் சேர்மன் சக் ராபின்ஸ் இது குறித்து விரிவாக ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் பிசினஸை சீரான பாதையில் கொண்டு செல்ல ஏதுவாக சிற்சில ரைட்சைஸிங் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நீங்கள் அது பணியாட்கள் என்று யூகித்தால் அப்படியே செய்து கொள்ளலாம் என்றார்.


ட்விட்டர் லே ஆஃப்:


எலான் மஸ்க் டிவிட்டரில் நடத்திய அதிரடியான ஆட்குறைப்பு மற்றும் மாஸிவ் லே-ஆஃப் என்பது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இந்திய ஊழியர்களும் இதற்கு தப்பவில்லை. இந்தியாவில் டிவிட்டரில் பணியாற்றி வருபவர்களில் 90 சதவிகிதத்தினர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர் என்றும், தற்பொழுது 12 நபர்கள் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள்.


மெட்டா லே ஆஃப்


ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை 'மெட்டா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் அளித்திருந்தார். அதில், 'கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணையப் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.


ஆனால், மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த போட்டி மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் ஆகியவை எதிர்பார்த்ததைவிடக் குறைவான வருவாயையே அளித்தன. பணிநீக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய கஷ்டத்தை அளிக்கும் என்பதை அறிவேன். பணிநீக்கத்தால் பாதிக்கப்படுவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டதோ அதற்கும், பணி நீக்கத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.


ட்விட்டர், மெட்டா தொடர்ந்து அமேசான் லே ஆஃப் செய்த நிலையில் இப்போது அது சிஸ்கோவிற்கு வந்துள்ளது.