Pope Francis Health: போப் ஃபிரான்சிஸ் உடல்நிலை குணமடைந்து மீண்டு வரவேண்டும் என, சர்வதேச அளவில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவமனையில் போப் ஃபிரான்சிஸ்
உலகளாவிய கிறிஸ்துவ மதத்தின் தலைவரான போப் ஃபிரான்சிஸ், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி , ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவர் சுவாசிப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொண்டார். இதனால் மருத்துவர்கள் அதிக ஓட்ட ஆக்ஸிஜன் ஆதரவை வழங்க வழிவகுத்தனர். கூடுதலாக, மருத்துவ வல்லுநர்கள் ரத்த சோகை தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து இரத்தமாற்றம் செய்தனர்.
போப் ஃபிரான்சிஸ் கவலைக்கிடம்:
இந்நிலையில் வெள்ளிக்கிழமையை விட சனிக்கிழமை அன்று போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை மிகவும் சவாலானதாக மாறியது என வாட்டிகன் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டது. மேலும் "இந்த நேரத்தில், நாங்கள் எந்த உறுதியான கருத்துகளையும் வழங்க முடியாது" என்று கூறியது. போப் ஃபிரான்சிஸ் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச தொற்று இரண்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது மருத்துவமனையில் தங்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போப் qபிரான்சிஸின் தனிப்பட்ட மருத்துவர் லூய்கி கார்போனி, போப் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை என்று கூறினார். சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனைகளில், அவருக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரியவந்தது, இது பிளேட்லோபீனியா அல்லது த்ரோம்போசைட்டோபீனியா எனப்படும் நிலை ஆகும்.
பிரச்னை என்ன?
பிரான்சிஸ் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் செப்சிஸ் எனப்படும் ரத்தத்தில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது நிமோனியாவின் சிக்கலாக ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, செப்சிஸ் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, மேலும் பிரான்சிஸ் தான் எடுத்துக்கொண்ட பல்வேறு மருந்துகளுக்கு எதிர்வினையாற்றுகிறார் என்று போப்பின் மருத்துவக் குழு, போப்பின் நிலை குறித்த முதல் விரிவான தகவலில் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரான்சிஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் அவரது சுவாச அமைப்பில் தற்போது அமைந்துள்ள சில கிருமிகள் ரத்த ஓட்டத்தில் சென்று செப்சிஸை ஏற்படுத்துவதாகும். செப்சிஸ் உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.."சுவாசப் பிரச்சினைகள் மற்றும் வயது முதிர்ச்சியால், செப்சிஸிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த போப் ஃபிரான்சிஸ்?
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 1936 ஆம் ஆண்டு பிறந்த போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. போப் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்றார். குறிப்பாக, தெற்கு அரைக்கோளத்திலிருந்து வந்த முதல் போப் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.