போலந்து , உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை பிரதம மோடி மேற்கொண்டுள்ளார்.
போலந்தில் பிரதமர்:
பிரதமர் மோடி நேற்று போலந்து நாட்டிற்கு சென்றடைந்தார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது,
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.
நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோரை சந்திப்பதில் மகிழ்ச்சி எனவும், போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி எனவு தெரிவித்தார்.
உக்ரைன் :
போலந்தில் இருந்து, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீர்வு காண கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதிபர் செலன்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில் இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த இரு நாடுகளுடனான விரிவான தொடர்புகளின் இயற்கையான தொடர்ச்சிக்கும் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவான, துடிப்புமிக்க உறவுகளுக்கு அடித்தளத்தை அமைக்கவும் இந்தப் பயணம் உதவும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
ரஷ்யா - இந்தியா:
இந்தியா மற்றும் ரஷ்யா மிகவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றனர். உக்ரைன் - ரஷ்யா போரின் போது, எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவான முடிவை இந்தியா எடுக்கவில்லை. கடந்த மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்றபோது, உக்ரைன் அதிபர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் செல்வது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு ,ரஷ்யா இதுவரை எந்தவொரு எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை. போரை நிறுத்த பிரதமர் மோடி மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்குமா, இந்தியா - உக்ரைன் நிலைப்பாட்டையடுத்து ரஷ்யா எந்த நிலைப்பாட்டை எடுக்க போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்