சீனாவின் குவாங்க்ஸி பகுதியில் பயணிகள் விமானம், விபத்துக்குள்ளான நிகழ்வை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். 


சீனாவின் குவாங்க்ஸியில் தெற்குப் பகுதிகளில் 132 நபர்களோடு பயணித்த பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த அவசரநிலை மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. 


கிழக்கு சீன ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் பகுதியில் இருந்து காங்ஷூ பகுதிக்குச் செல்லும் வழியில், வுஷூ நகரத்திற்குட்பட்ட டெங்க்ஸியான் பகுதியில் விழுந்துள்ளதோடு, அப்பகுதியில் காட்டுத்தீயையும் ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் `சீனாவின் குவாங்க்ஸி பகுதியில் 132 பயணிகளோடு பறந்த MU5735 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாவதை அறிந்தவுடன், அதிர்ச்சியும், வருத்தமும் கொண்டேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நினைத்துக் கொள்வதோடு, அவர்களுக்காக பிரார்த்திக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.  






அவசர சிகிச்சைக்காக பல்வேறு மீட்புக் குழுவினரும் விபத்து நடந்துள்ள இடத்திற்குச் சென்றுள்ள நிலையில், முதல் கட்டமாக பெரும்பாலும் விபத்துக்குள்ளானவர்களில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது அப்பகுதியில் பலரையும் வருத்தத்திற்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், விமானம் மலைப் பகுதியில் விழுந்ததால், அப்பகுதிகளில் உள்ள காடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டு, நூறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தத் தீயை அணைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத் தீயை அணைப்பதற்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


விமான விபத்து குறித்த தெளிவான காரணம் இன்னும் தெரியப்படாத நிலையில், குவாங்க்ஸி பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, வுஷு பகுதியில் தொலைதொடர்பு இணைப்பை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  


விமான விபத்து குறித்து கூறப்பட்டவுடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, விபத்துக்குள்ளானவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், விமான விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவும், உத்தரவிட்டுள்ளார். 


போயிங் 757 ரக விமானங்கள் உலகிலேயே பாதுகாப்பானவை எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்திற்குப் பிறகு, கிழக்கு சீன ஏர்லைன்ஸ் போயிங் 757 ரக விமானங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது.