கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷிய படைகள் திரும்பப்பெற்றுள்ளது.
இதற்கு மத்தியில், அணு ஆயுத பயன்பாடு குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. "ஆக்ரோஷமான ரஷிய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன. இது ஒரு முட்டாள்தனம் அல்ல.
அணு ஆயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என அணு ஆயுதம் குறித்து புதின் பேசியிருந்தார். இன்னும் சிறிது காலத்திற்கு உக்ரைன் போர் நீளும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
போருக்கு பிறகு, பல்வேறு விவகாரங்களில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைபாட்டையே இந்தியாவும் சீனாவும் எடுத்துள்ளது. மேற்குலக நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தபோதிலும் ஐநாவில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருந்தது.
போரை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பல சூழ்நிலைகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அணு ஆயுத பயன்பாடு குறித்து இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் கவலை தெரிவித்திருப்பது ரஷியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
பிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், "ஷி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து தங்கள் கவலைகளை எழுப்பியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நினைக்கிறேன்.
இது ரஷியர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. இது மிரட்டல் மட்டுமே" என்றார்.
சமீப காலமாகவே, போரில் ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், அக்டோபர் மாதம் தொடங்கி ரஷியா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
போர் தொடங்கிய காலத்திலிருந்து மிக பெரிய தாக்குதலை ரஷியா நேற்று முன்தினம் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 70 ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலைய வைத்துள்ளது.
இதை தொடர்ந்து, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கிவ்வில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி, நாடு முழுவதும் அவசர அவசரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ரஷியா மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்து பேசிய உக்ரைன் அதிகாரி ஒருவர், "மத்திய க்ரிவி ரிஹ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தெற்கில் கெர்சனில் வெடிகுண்டு தாக்குதலில் மற்றொருவர் இறந்ததார்" என்றார். உக்ரைன் தாக்குதலில் 12 பேர் இறந்ததாக கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியா தாக்குதலை தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷியா இன்னும் பல பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள போதுமான ஏவுகணைகளை வைத்துள்ளது. இன்னும் நிறைய வான்வழி ஆயுதங்களை மேற்குலக நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.