இந்தியப் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், சிட்னியில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்று பிரதமர் மோடிக்கு உற்சாக வர்வேற்பளித்து வருகின்றனர்.


வேத மந்திரங்கள் முழங்க வரவேற்பு:


ஜப்பான், ஹிரோஷிமாவில் ஜி7 மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள  பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜப்பானைத் தொடர்ந்து, பசிஃபிக் தீவான பப்புவா நியூ கினியா சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராஃபே உடன் இணைந்து அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார்.


தொடர்ந்து அங்குள்ள உள்ளூர் மொழியான டோக் பிசினில் திருக்குறளை வெளியிட்டார்.  இந்நிலையில் இன்று (மே.23) ஆஸ்திரேலியா சென்றடைந்த பிரதமர் மோடியை, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ் வரவேற்றார்.


மோடி தான் பாஸ்:


சிட்னியில் உள்ள குடோஸ் வங்கி அரங்கிற்கு பிரதமர் மோடி முன்னதாக வருகை தந்த நிலையில், அங்கு அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், “இந்த மேடையில் நான் கடைசியாக பிரபல அமெரிக்க பாடகர் ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீனைப் பார்த்தேன். பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் மோடிதான் பாஸ்.


மார்ச் மாதம் நான் இந்தியா சென்றது ஒரு மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த தருணம். ​​குஜராத்தில் ஹோலி கொண்டாடினேன், டெல்லியில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்தேன்.  நான் சென்ற இடமெல்லாம், ஆஸ்திரேலியாவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான ஆழமான தொடர்பை உணர்ந்தேன். நீங்கள் இந்தியாவை புரிந்து கொள்ள விரும்பினால், ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யுங்கள்” என உற்சாகமாகப் பேசினார்.


 






பரஸ்பர நம்பிக்கை:


அவரைத் தொடர்ந்து உரையாற்றத் தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது:  "முன்பெல்லாம் காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் குழம்பு (curry) ஆகிய மூன்றும் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உறவை வரையறுக்கும் 3C என்று கூறப்பட்டது. பின்னர் ஜனநாயகம், புலம்பெயர்ந்தோர், எரிசக்தி, பொருளாதாரம், கல்வி ஆகியவை நமது உறவை பிணைப்பதாக சிலர் கூறினர்.


ஆனால், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது, அது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை என்று நான் நம்புகிறேன். நமது வாழ்க்கை முறைகள் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் இப்போது யோகாவும் நம்மை இணைக்கிறது. நீண்ட காலமாக கிரிக்கெட் காரணமாக நாம் இணைந்திருக்கிறோம். ஆனால் இப்போது டென்னிஸ், திரைப்படங்கள் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. நாம் வித்தியாசமான உணவை தயார் செய்தாலும், மாஸ்டர்செஃப் நம்மை இணைக்கிறது. 


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தூதரக உறவுகளால் மட்டும் பரஸ்பர நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் உருவாகவில்லை.  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களாகிய நீங்கள் அனைவரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையான பிணைப்புக்கு காரணம்.


சாட், ஜிலேபி:


ஆஸ்திரேலியாவின் ஹாரிஸ் பூங்காவில் உள்ள ஜெய்ப்பூர் ஸ்வீட்ஸின் சாட் உணவு மற்றும் ஜிலேபி மிகவும் சுவையாக இருக்கும் என நான் கேள்விப்பட்டேன். நீங்கள் அனைவரும் எனது நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸை அங்கு அழைத்துச் செல்லுங்கள்.


இன்று உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக IMF (சர்வதேச நாணய நிதியம்) கருதுகிறது. பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்று சிக்கலில் உள்ளது, ஆனால் மறுபுறம், இந்தியாவின் வங்கிகள் வலிமையாக செயல்படுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது” எனப் பேசி வருகிறார்.